புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை குறித்து வெளியான தகவல்?

Report Print Murali Murali in அரசியல்

நாட்டில் ஏற்பட்டுள்ள அரசியல் நெருக்கடி முடிவுக்குகொண்டுவரப்படும் வகையில் நாளை மறுதினம் ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்கவுள்ளார்.

ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித்த சேனாரட்ன இதனை உறுதிப்படுத்தியுள்ளார். இந்நிலையில், எதிர்வரும் திங்கட்கிழமை புதிய அமைச்சரவை பதிவியேற்கும் என தெரிவிக்கப்படுகின்றது.

19ஆம் திருத்த சட்டத்திற்கு அமைய அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுப்படுத்தப்பட்டதாகவே இருக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்படி, ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியை சேர்ந்த ஆறு பேர் உள்ளடங்களாக 30 பேர் கொண்ட அமைச்சரவை திங்கட்கிழமை பதவியேற்கும் என தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனினும் இது குறித்த உறுதியான தகவல்கள் எவையும் வெளியாகவில்லை.

ஒக்டோபர் 26ஆம் திகதி மைத்திரி - மகிந்தவின் கூட்டணி ஏற்படுத்தப்பட்ட பின்னர் சுதந்திர கட்சியின் சில முக்கிய உறுப்பினர்கள் அதிருப்தியில் இருந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில், ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஒன்பது நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஆதரவளிக்க தீர்மானித்துள்ளதாக நம்பகரமான அரசியல் வட்டாரங்களிலிருந்து அறியமுடிகின்றது.

இதன்படியே, தற்போது சுதந்திரக் கட்சியை சேர்ந்த ஆறு உள்ளடங்கிய 30 பேரை கொண்ட புதிய அமைச்சரவை ஏற்படுத்தப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதேவேளை, ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைந்து அரசாங்கம் அமைக்க தாம் ஒருபோதும் தயாரில்லையெனவும், நாடாளுமன்றத்தில் எதிர்க் கட்சியில் செயற்படுவதற்கு தீர்மானித்துள்ளதாகவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் லக்ஷ்மன் யாபா அபேவர்தன தெரிவித்துள்ளார்.

எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் யாராவது விரும்பினால் அரசாங்கத்தில் இணைந்து கொள்ளலாம் எனவும், அவ்வாறு சேர்பவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கைகள் எடுக்கப்பட மாட்டாது என ஜனாதிபதி கூறியுள்ளதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Latest Offers