கோத்தா மீதான கொலை சதியில் திட்டமிட்டு சிக்கவைக்கப்பட்ட தமிழர்! துலங்கும் உண்மைகள்

Report Print Dias Dias in அரசியல்

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீதான கொலை சதி வழக்கு தொடர்பில் கைது செய்யப்பட்டு பொலிசார் சித்திரவதை செய்ததை தனக்கு கூறவேண்டாம் என சட்ட வைத்திய அதிகாரி சுப்ரமணியம் கணேஸ் தன்னை எச்சரித்ததாக, குறித்த கொலை சதி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள செல்வசந்திரன் சந்திரபோஸ் மேல் நீதிமன்றில் தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

கடந்த 2006ஆம் ஆண்டு மார்கழி மாதம் முதலாம் திகதி கொழும்பு கொள்ளுபிட்டி பித்தலை சந்தியில் முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை கொலை செய்ய சதித்திட்டம் தீட்டி தாக்குதல் நடத்தப்பட்டது.

விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தற்கொலை குண்டுதாரியால் நடத்தப்பட்ட இந்த தாக்குதலில் மூன்று இராணுவ பாதுகாப்பு அதிகாரிகளுக்கு மரணத்தை விளைவித்ததுடன் அப்போதைய பாதுகாப்பு செயளாளரான கோத்தபாய ராஜபக்ச, இராணுவ பாதுகாப்பு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களுக்கு கடும் காயங்களை ஏற்படுத்தியதுடன் அரச சொத்துக்களுக்கு பெரும் சேதம்

விளைவித்ததாக பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் கீழ் ஜவருக்கு எதிராக கொழும்பு மேல் நீதிமன்றில் சட்டமா அதிபரினால் 2013ஆம் ஆண்டு மார்கழி மாதம் நான்காம் திகதி வழக்குத் தாக்கல் செய்யப்பட்டது.

இந்த வழக்கில் எதிரியின் சாட்சியங்களை அரசதரப்பு நிறைவு செய்ததையடுத்து நான்காம் எதிரியான செல்வசந்திரன் சந்திரபோஸின் சாட்சியத்தினை, ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி. தவராசா நெறிப்படுத்துகையில் சாட்சி தனது சாட்சியத்தில்,

1993ஆம் ஆண்டு புற்றுநோய்க்கு சிகிச்சை பெறுவதற்காக கொழும்பு வந்து மகரகம புற்றுநோய் வைத்திசாலையில் தொடர்ச்சியாக சிகிச்சை பெற்று வரும்பொழுது கொழும்பில் 2006ஆம் ஆண்டு தன்னை பயங்கரவாத புலனாய்வு பிரிவுப் பொலிசார் கைது செய்து தடுத்து வைத்து சித்திரவதை செய்து தன்னிடம் வாக்குமூலம் பெற்றதாக தனது சாட்சியத்தில் தெரிவித்துள்ளார்.

2009ஆம் ஆண்டு ஆடி மாதம் 14ம் திகதி காலை பொலிசார் வைத்தியப் பரிசோதனைக்கு சட்ட வைத்திய அதிகாரி சுப்பிரமணியம் கணேஷ் முன்னிலையில் கொண்டு சென்ற பொழுது, தன்னை பொலிசார் சித்திரவதை செய்ததையும் அதனால் தனக்கு ஏற்பட்ட கடும்காயங்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் காட்டியபொழுது சட்ட வைத்திய அதிகாரி காயங்களை பார்வையிட்டு பரிசோதனை செய்ய மறுத்தார்.

அத்துடன், பொலிசார் சித்திரவதை செய்ததையோ அதனால் ஏற்பட்ட காயங்களைப் பற்றிய விபரங்களையோ சட்ட வைத்திய அறிக்கையில் பதிவு செய்தால் தனக்கும் பிரச்சினை எனக்கும் பிரச்சினை வரும் என கூறி தன்னை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்தவில்லையென சாட்சியமளித்தார்.

எதிரி மேலும் தனது சாட்சியத்தில் 2009ஆம் ஆண்டு ஆடி மாதம் 14ஆம் திகதி மாலை ஏற்கனவே தட்டெழுத்து செய்யப்பட்டிருநத சில ஆவணங்களில் பலவந்தமாக கையொப்பங்களை பெற்றனர்.

அதன்பின்னர் மறுதினம் 15ஆம் திகதி பொலிசார் தன்னை சட்ட வைத்திய அதிகாரி உருத்திரமூர்த்தி மயுரதனின் முன் முன்னிலைப்படுத்திய பொழுது, பொலிசார் சித்திரவதை செய்ததையும் அதனால் ஏற்பட்ட கடும்காயங்களையும் சட்ட வைத்திய அதிகாரியிடம் காட்டியபொழுது சட்ட வைத்திய அதிகாரி காயங்களை பார்வையிட்டு உடற்பரிசோதனை செய்ததுடன் பொலிசார் செய்த சித்திரவதைகளை நீதிமன்றிற்கு முறையிடும்படியும் ஆலோசனை வழங்கினார்.

சட்ட வைத்திய அதிகாரியின் காரியாலயத்திலிருந்து பொலிசார் என்னை நீதிமன்றில் ஆஜராக்கியபொழுது பொலிசார் என்னை சித்திரவதை செய்ததை நீதிமன்றிலும் முறையிட்டதாக சாட்சியம் அளித்தார்.

மேலும் தனது சாட்சியத்தில் 2012ஆம் ஆண்டு சித்திரவதை மற்றும் சட்டரீதியற்ற தடுத்து வைப்பிற்கும் எதிராக உயர்நீதிமன்றில் அடிப்படை மனித உரிமை மீறல் மனுவும் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

அந்த மனு உயர் நீதிமன்றினால் விசாரணைக்கு அனுமதி வழங்கப்பட்டு மேலதிக விசாரணை 2019ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் திகதிக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது எனவும் சாட்சியமளித்த நிலையில் மேலதிக விசாரணைக்காக மேல் நீதிமன்ற நீதிபதி வழக்கை தை மாதம் 16ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார் எனவும் தெரவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers