காலமான முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரின் நினைவுகளை பகிர்ந்துள்ள முன்னாள் பிரதியமைச்சர்

Report Print Sujitha Sri in அரசியல்

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிறின்ஸ் காசிநாதர் தொடர்பான சில தகவல்களை முன்னாள் பிரதியமைச்சர் பசீர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பிறின்ஸ் காசிநாதர் கடந்த 12ஆம் திகதி பிற்பகல் காலமானார்.

இந்த நிலையில் அவர் தொடர்பான சில நினைவுகளை முன்னாள் பிரதியமைச்சர் பசீர் தனது முகப்புத்தகத்தில் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில்,

அண்மையில் 93ஆவது வயதில் மறைந்த நிமிர்ந்த ஆசான், மட்டக்களப்பு மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கனவான் பிறின்ஸ் காசிநாதரின் நினைவாக, 27 வருடங்களுக்கு முன்னர் தம்பி அலவி சரீப்தீனுடைய திருமண நிகழ்வில் எடுத்துக்கொண்ட நிழற் படத்தை இங்கு பதிவிடுகிறேன்.

இடது மூலையில் புன்சிரிப்போடு அமர்ந்திருப்பவர் இளம் வயதில் இறந்து போன முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் தோழர் இம்மானுவேல் சில்வா ஆகும்.

பிறின்ஸ் காசிநாதர் நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில் ஐரோப்பிய நாடொன்றில் இடம் பெற்ற மாநாடொன்றில் கலந்து கொள்வதற்காக இலங்கையைப் பிரதிநிதித்துவப்படுத்திச் சென்ற குழுவின் உறுப்பினர்களில் ஒருவராகச் சென்றிருந்தார்.

மாநாட்டு மேடையில் Prince என்று எழுதப்பட்ட ஒரு விசேட கதிரையில் மிகவும் மரியாதையாக அழைத்துச் சென்று காசிநாதர் இருத்தப்பட்டாராம். கூட்ட ஏற்பாட்டாளர்கள் Prince என்ற பெயரின் காரணமாக இவரை ஒர் இளவரசர் என்று நம்பினராம்.

எழுந்து வரும்போது ஏற்பாட்டாளர்களிடம் “நான் பெயரில் மட்டும்தான் Prince அரச குடும்பத்தைச் சேர்ந்தவனல்ல” என்று கூறினாராம். நமது மட்டக்களப்பின் பிறின்ஸ். இக்கதையை ஒரு நாள் அவரே என்னிடம் கூறிக் கலகலவெனச் சிரித்தார்.

1994ஆம் ஆண்டு அன்றைய சபாநாயகர் எம்.எச்.முஹம்மத் தலைமையில் பாக்கிஸ்தான் சென்ற நாடாளுமன்றக் குழுவில் நானும், காசிநாதரும் அங்கத்துவம் பெற்றிருந்தோம்.

அன்றைய பாக்கிஸ்தான் பிரதமர் நவாஸ் சரீபை அவரது அலுவலகத்தில் சந்தித்து இலங்கைக்கு தொழில் நுட்பக்கல்விக்கான உதவிகளை செய்யுமாறு கோரினோம். சந்திப்பு முடிந்ததும் பிரதமரோடு நின்று தனித்தனியாகப் புகைப்படம் எடுத்தோம்.

நானும் காசிநாதரும் பிரதமரோடு சேர்ந்து நிற்க இன்னொரு இலங்கை எம்.பி, காசிநாதரின் கமராவில் எம்மைப் படமெடுக்க முற்பட்ட போது சிரித்த நவாஸ் சரீப் “நீங்கள் கமராவைத் தலைகீழாகப் பிடித்திருக்கிறீர்கள், நேராகப் பிடியுங்கள் என்று சொன்னார்”. கமரா தலைகீழாகத்தான் பிடிக்கப்பட்டிருந்தது.

உடனே இதற்காகத்தான் நாங்கள் உங்களிடம் தொழில் நுட்ப உதவி கோரினோம், ஒரு நாடாளுமன்ற உறுப்பினருக்கே கமராவில் புகைப்படம் எடுப்பது எப்படி என்று கூடத் தெரியவில்லை பார்த்தீர்களா? என்று சரீபைப் பார்த்துச் சொன்னார் காசிநாதர், சபை கொல்லெனச் சிரித்தது.

காசிநாதர் நாடாளுமன்றில் பேச எழுந்தவுடன் அஷ்ரஃப் எங்கிருந்தாலும், நான் ஷேக்ஸ்பியரின் ஆங்கிலத்தை செவிமடுக்க வேண்டும் என்று கூறியவராக சபைக்குள் அவசரமாக நுழைவார்.

இவ்வாறே அஷ்ரஃப் உரையாற்றத் தொடங்கும் போது, காசிநாதர் எங்கிருந்தாலும் நான் அஷ்ரஃபின் அழகு ஆங்கில உரையைக் கேட்க வேண்டும் என்று ஓடிவருவதையும் கண்டிருக்கிறேன்.

1965ஆம் ஆண்டு கொழும்பில் இருந்து மட்டக்களப்புக்கு வந்து நாடாளுமன்றத் தேர்தலில் வேட்பாளராக நின்ற மாக்கான் மாக்காருக்கே தான் வாக்களித்ததாக என்னிடம் காசிநாதர் சொன்னார்.

ஏன் கொழும்பிலிருந்து வந்தவருக்கு வாக்களித்தீர்கள் என்று அவரைக் கேட்டேன். “அவன் காசிக்காரன், பதவியைக் காசி உழைக்கப் பாவிக்கமாட்டான்” என்று நம்பியதால் மாக்கானுக்கு வாக்களித்தேன் என்றார்.

இன்று நம்மோடு காசிநாதர் இல்லை ஆனால் நமது அரசியலில் கா(சு)சி நாதர்கள் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...