ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகள் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் இணைந்து போட்டியிட உள்ளதாகவும் கோத்தபாய ராஜபக்சவை வேட்பாளராக நிறுத்தவும் தீர்மானித்துள்ளதாக வாராந்த சிங்கள பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இதற்கு இணக்கம் வெளியிட்டுள்ளதுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதில்லை எனவும் தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஜனாதிபதி, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் கூட்டத்தில் இதனை கூறியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
ஜனாதிபதி நியமித்த அரசாங்கம் தோல்வியடைந்து, மகிந்த ராஜபக்சவுக்கு அரசியல் ரீதியான செல்வாக்கு சரிய ஆரம்பித்ததும், கோத்தபாய ராஜபக்சவின் ஆதரவாளர்கள், அவரை அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் வேட்பாளராக நிறுத்தும் விரிவான பிரசாரங்களை ஆரம்பித்துள்ளனர் தெரியவருகிறது.
கோத்தபாய ராஜபக்சவுக்கு நெருக்கமான நண்பரான பிரபல வர்த்தகர் திலித் ஜயவீர, மிலிந்த ராஜபக்ச உட்பட சிலர் இதற்கு செயற்பாட்டு ரீதியான பங்களிப்பை வழங்கி வருவதாக பேசப்படுகிறது.
இதன் ஒரு கட்டமாகவே இந்த செய்தியை பிரசுரித்துள்ள வாராந்த பத்திரிகை “கோத்தபாயவின் வருகையை மைத்திரி விரும்புகிறார்” என தலைப்பிட்டு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது.