ரணில் அரசாங்கத்தின் அமைச்சர்கள் விபரம் மைத்திரியிடம்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

புதிய அரசாங்கத்தின் அமைச்சரவை அடங்கிய பெயர் விபரத்தை ரணில் விக்ரமசிங்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிடம் கையளிக்கவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நீதிமன்றத் தீர்ப்பினையடுத்து மகிந்த ராஜபக்ச தன்னுடைய பதவியை இராஜினாமா செய்து கொண்டதையடுத்து, நாளை மீண்டும் பிரதமராக ரணில் விக்ரமசிங்க பதவியேற்கிறார்.

இந்நிலையில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன முன்னிலையில் நாளை காலை 10 மணிக்கு, ரணில் விக்ரமசிங்க பிரதமராக பதவியேற்பார் என்று ஐக்கிய தேசிய கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

எனினும், புதிய அமைச்சர்களின் பதவியேற்பு நாளை மறுநாள் திங்கட்கிழமை இடம்பெறலாம் என்றும் அக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்நிலையில், ரணில் விக்ரமசிங்கவின் அமைச்சரவையில் இடம்பெறவுள்ள அமைச்சர்களின் பட்டியலைத் தயாரிக்கும் பணி நேற்றிரவு அலரி மாளிகையில் இடம்பெற்றதாக அக்கட்சியை மேற்கோள்காட்டி தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தப் பணியில் ரணில் விக்ரமசிங்க, சஜித் பிரேமதாச உள்ளிட்ட ஐதேக தலைவர்களும், ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர்களும் இதுதொடர்பான ஆலோசனைகளில் ஈடுபட்டனர்.

இந்த கலந்தாய்வின் முடிவில் அமைச்சர்களின் பட்டியலை ரணில் விக்கிரமசிங்க, ஜனாதிபதியிடம் கையளிப்பார். 19 ஆவது திருத்தச்சட்டத்துக்கு அமைய, 30 அமைச்சர்கள் மற்றும், பிரதி அமைச்சர்கள் மற்றும் இராஜாங்க அமைச்சர்கள் 45 பேரை மட்டுமே நியமிக்க முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேவேளை புதிய அமைச்சரவையில் ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 6 பேரும் இடம்பெறும் வாய்ப்புகள் இருப்பதாக கொழும்பு அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Latest Offers

loading...