நிர்வாணக் கோலத்தில் மஹிந்த! வெட்கித் தலைகுனியட்டும் மைத்திரி!

Report Print Rakesh in அரசியல்

"மீண்டும் ஜனாதிபதியாகும் ஆசையால் ஜனாதிபதி மைத்திரிபால, பிரதமர் பதவியை ரணிலிடம் இருந்து பறித்தெடுத்து அதை மஹிந்தவுக்கு முடிசூட்டி அழகுபார்த்தார்.

இப்போது மஹிந்த பிரதமர் பதவியை இழந்து நிர்வாணக் கோலத்தில் நிற்கின்றார். அதைப் பார்த்து மைத்திரி வெட்கித் தலைகுனிய வேண்டும்."

இவ்வாறு ஜாதிக ஹெல உறுமயவின் தலைவரும் ஐக்கிய தேசிய முன்னணி நாடாளுமன்ற உறுப்பினருமான சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு ஊடகத்தின் கொழும்புச் செய்தியாளருக்கு வழங்கிய நேர்காணலிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது,

"ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் போட்டியிடமாட்டேன் என்று திரும்பத் திரும்பக் கூறி வந்த மைத்திரிபால சிறிசேனவுக்கு திடீரெனப் பதவி ஆசை வந்தது. ஜனாதிபதித் தேர்தலில் மக்கள் முன்னால் அவர் வைத்த வாக்குறுதிகள் எல்லாம் இன்று காற்றில் பறந்தன.

குடும்ப ஆட்சிக்குத் தூபமிட்ட மைத்திரி அந்தத் திட்டம் நிறைவேறாததால் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதியிலிருந்து சர்வாதிகார ஆட்சியை நடத்தினார். தினமும் அவரது வாயில் இருந்து வந்த சொற்கள் தோல்வியின் உச்சத்தைத் தொட்டுக் காட்டின.

மீண்டும் வெற்றி பெற முடியாதவன், மக்களால் வெறுக்கப்படுபவனே இறுதியில் சர்வாதிகார ஆட்சியைக் கையில் எடுப்பான். அந்த நிலைமைக்குள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சென்றார்.

அவர் தானாகவே ஜனாதிபதி பதவியில் இருந்து விலகிச் சென்றிருந்தால் ஓரளவாவது நன்மதிப்பைப் பெற்றிருப்பார். தற்போது படுமோசமான அவமான நிலையை அவர் எதிர்கொண்டுள்ளார்.

ஐக்கிய தேசிய முன்னணியாகிய நாம் நாடாளுமன்றத்தில் பல தடவைகள் பெரும்பான்மைப் பலத்தை நிரூபித்துக் காட்டியிருந்தோம். அந்தப் பெரும்பான்மைப் பலத்துக்கு மதிப்பளித்தே சபாநாயகர் செயற்பட்டார்.

ஆனால், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சபாநாயகரை மதிக்காது, மஹிந்தவை விடவும் மோசமாகச் சர்வாதிகாரப் போக்குடன் செயற்பட்டார். அதற்கு முடிவு கட்டியுள்ளோம்.

ஐக்கிய தேசிய முன்னணியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க நாளை மீண்டும் பிரதமராகப் பதவியேற்கின்றார்" என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers