கூட்டமைப்பில் இருந்து தப்பியோடி வியாழேந்திரன் எம்.பி! ரணிலிடம் தஞ்சம்

Report Print Vethu Vethu in அரசியல்

தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மஹிந்த அணிக்கு கட்சி தாவிய நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன், ரணிலுடன் இணைந்து கொள்ளவுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

கடந்த ஒக்டோபர் மாதம் 26ம் திகதி ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலையை அடுத்து, தமிழ் தேசிய கூட்டமைப்பில் இருந்து மஹிந்த அணியில் இணைந்து கொண்டு பிரதியமைச்சர் பதவியை பெற்றுக் கொண்டார்.

ஆனாலும் நீதிமன்றத் தீர்ப்புகளினால், அடுத்த சிலநாட்களிலேயே இவர்கள் அமைச்சர்களாகப் பதவி வகிக்க முடியாத நிலை ஏற்பட்டது.

மைத்திரி- மஹிந்த அரசாங்கம் தோல்வி கண்டுள்ளதை அடுத்து, இன்று ரணில் விக்கிரமசிங்க தலைமையிலான புதிய அரசாங்கம் அமைக்கப்படவுள்ளது.

இந்நிலையில் ஐக்கிய தேசிய கட்சியுடன் இணைந்து ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்க வியாழேந்திரன் விரும்பம் கொண்டுள்ளார்.

அதேபோன்று இதேகாலப்பகுதியில் கட்சி தாவி அமைச்சுப் பதவிகளைப் பெற்ற, ஐக்கிய தேசிய கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜேதாச ராஜபக்ச, ஆனந்த அழுத்கமகே, துனேஸ் கங்கந்த, அசோக பிரியந்த, எஸ்.பி நாவசின்ன ஆகியோரும் மீண்டும் ரணிலுக்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளனர்.

இவர்கள் புதிய அரசாங்கத்தில் அமைச்சர்களாக இணைந்து கொள்வதற்கு, விருப்பம் வெளியிட்டுள்ளனர் என்று கொழும்பு ஆங்கில வாரஇதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.

மஹிந்த அணியில் இணைந்து கொண்ட பின்னர், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும், ரணில் விக்கிரமசிங்கவையும், வியாழேந்திரன் கடுமையாக விமர்சித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers