மைத்திரிபால சிறிசேன சிறுபான்மையினருக்கு செய்த துரோகம்! அம்பலப்படுத்தும் அரசியல்வாதி

Report Print Rusath in அரசியல்

சிறுபான்மையினரோடு முரண்பட்ட மஹிந்த ராஜபக்ஷவை பிரமராக்கியது மைத்திரிபால சிறிசேன சிறுபான்மையினருக்கு செய்த துரோகமாகும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பொன் செல்வராசா தெரிவித்துள்ளார்.

'ஜனநாயகத்தை பாதுகாப்பது மக்களின் கடமைப்பாடாகும்' எனும் தொனிப்பொருள் இன்றைய தினம் கருத்தரங்கும், கலந்துரையாடலும் மட்டக்களப்பு கூட்டுறவுக் கேட்போர் கூடத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

ஜனாதிபதிக்கும், பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் ஏற்பட்ட தனிப்பட்ட முரண்பாடுகள் ஒரு நாட்டின் ஜனநாயக அரசியலை சீரழித்திருக்கிறது. இதனால் நாட்டு மக்கள் பல இழப்புக்களை சந்தித்துள்ளார்கள்.

19ஆவது திருத்தச் சட்டத்தை நாடாளுமன்றத்திலே கொண்டு வந்து, அதனை வெற்றிபெற செய்வதற்கு மிகவும் பாடுபட்டவர் ஜனாதிபதி மைத்திரிதான். அவருக்கு அதன் சட்டம் நன்றாகத் தெரியும்.

மக்களாலே ஆணையிட்டு உருவாக்கப்பட்ட நாடாளுமன்றத்தை கலைப்பது ஜனநாயகத்திற்கு விரோதமானது. இந்த நாட்டின் அரசியல் சீரழிவால் ரணிலோ, மைத்திரியோ பாதிக்கப்படவில்லை .

முற்று முழுவதுமாகப் பாதிக்கப்பட்டவர்கள் இந்த நாட்டு மக்களேதான். எதிர்வருகின்ற ஜனவரி வரை இந்த இழுபறி நீடிக்குமாக இருந்தால் அரசாங்க உத்தியோகத்தர்கள் கூட அவர்களது சம்பளத்தைப் பெற முடியாத நிலையும் ஏற்படும்.

வெளிநாட்டு அரசாங்கங்கள் வழங்கிய பொருளாதார உதவிகளும் நிறுத்தப்படும் சந்தர்ப்பங்கள் உருவாகலாம். தற்போதைய அரசியல் ஸ்திரமற்ற நிலையினால் நாடு சீரழிவதை இப்பொழுது நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பு தடுத்து நிறுத்தியிருக்கிறது.

இது கடவுள் கொடுத்த வரமோ என்று தான் எண்ணத் தோன்றுகின்றது. இந்த நாட்டிலே ஒரு நல்ல நிலைமையை கொண்டு வருவதற்கு இறைவன் வழிவகுத்திருக்கின்றான்.

எனவே எதிர்வரும்காலங்களிலும் நியாயமான அரசாங்கம் ஏற்பட வேண்டும் என்பதிலே மக்கள் கவனமாக இருந்து கொள்ள வேண்டும்.

இது போன்றதொரு நிலைமை இந்த நாட்டில் இனி ஒரு போதும் ஏற்பட்டு விடக்கூடாது. நடைபெற்ற விரும்பத்தகாத விடயங்கள் எங்களுக்கு ஒரு படிப்பினையாக இருக்க வேண்டும் கூறியுள்ளார்.

Latest Offers