வவுணதீவு சம்பவம் நாட்டு மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது!

Report Print Yathu in அரசியல்

அண்மையில் தென்னிலங்கையில் ஏற்பட்டிருக்கும் நிலைமைகளும் அதற்கு பின்னர் தென்னிலங்கையில் உள்ள அரசியல் வாதிகளினால் ஏவிவிடப்பட்ட சில தரப்புக்களினால் கிழக்கு மாகாணத்தில் வவுணதீவில் ஏற்பட்ட சம்பவம் நாட்டு மக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்தியுள்ளது என ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

இந்த காலப்பகுதியில் தமிழர் தாயக பகுதியில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் ஜனநாயக நீரோட்டத்தில் செயற்பட்டுக்கொண்டிருக்கம் விடுதலை இயகத்தின் போராளிகள் மீது இலங்கையின் புலனாய்வுத்துறையினர் மேற்கொள்கின்ற அடாவடிகள் அச்சுறுத்தல்கள் தொடர்பிலும் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

ஒக்டோபர் மாதம் 26 ஆம் திகதிக்கு பின்னர் நாட்டில் ஏற்பட்டுள்ள அசாதாரண சூழ்நிலையில் அதன் விளைவுகள் தமிழர் வாழ் இடப்பகுதிகளுக்கு எவ்வாறு தாக்கத்தினை ஏற்படுத்தியுள்ளது என்பது தொடர்பில் இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

குறிப்பாக தமிழர் தாயக பகுதிகளில் வாழ்கின்ற மக்களுக்கும் முன்னாள் போராளிகளுக்கும் அந்த செயற்பாடுகள் தொடர்பில் முழுமையான விளக்கம் இன்னும் அரசாங்கத்தினால் அளிக்கப்படவில்லை. தொடர்ச்சியாக மறைமுகமாக எமது முன்னாள் போராளிகள் விசாரணைக்கு அழைக்கப்படுவதும், அச்சறுத்துவதும் ஜனநாயக போராளிகளின் கட்சிக்கு இடையூறு வழங்குவதும் ஒரு தெளிவற்ற நிலையினை நாங்கள் உணரக்கூடியதாக இருக்கின்றது.

இது தொடர்பில் வெளிப்படையாக ஒருசில முன்னாள் போராளிகள் புலனாய்வாளர்களால் அழைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு விடுதலை செய்துள்ளார்கள். மறைமுகமாக 50ற்கு மேற்பட்ட விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார்கள் என்ற தகவல் எமக்கு கிடைத்துள்ளது. இதனை விட தொலைபேசி ஊடாகவும் போராளிகள் அச்சுறுத்தப்பட்டுள்ளார்கள்.

போராளிகள் கட்சிரீதியில் அரசியலில் ஈடுபட்டிருக்கும் இந்த சூழலில் எங்களின் அரசியல் செயல்திட்டத்திற்கு இடையூறு விளைவிக்கும் செயலாகவும் இது அமைந்துள்ளது. இது ஜனநாயகத்தினை மீறும் செயலாக அமைந்துள்ளது.

ஜனநாயக போராளிகள் கட்சியின் ஊடகபேச்சாளர் துளசி அவர்கள் எதிர்வரும் 19ஆம் திகதி பயங்கரவாத குற்றத்தடுப்பு பிரிவின் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளார். இது மிகமோசமான ஜனநாயகத்தினை அத்துமீறும் செயலலாகவும், எமது செயற்பாடுகளின் முடக்கும் செயலாககவும் நாங்கள் கருதுகின்றோம்.

இன்று இலங்கையில் ஏற்பட்டிருக்கின்ற ஜனநாயகம் என்ற பதம் அதனை ஏற்கமுடியாது சிங்கள மக்களுக்கு மட்டும் தான் ஜனநாயகம் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

தமிழர் தாயகத்தில் அது இல்லை. உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் ஜனநாயகத்தினை நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றோம் என்று இப்போதும் கூறிக்கொண்டிருக்கின்றார்கள் என்றால் அதற்கும் விடுதலைப்புலிகள்தான் காரணம்.

ஒட்டுமொத்தமாக விடுதலைப்புலிகளால் உருவாக்கப்பட்ட தமிழ்தேசியக்கூட்டமைப்பின் ஆதரவினை பயன்படுத்தித்தான் இலங்கையில் ஜனநாயகத்தினை நிலைநிறுத்தி இருக்கின்றார்கள் என்பதுதான் உண்மை.

ஜனநாயகத்தின் கதாநாயகர்கள் தமிழீழ விடுதலைப்புலிகள் தான் தமிழ்தேசியக் கூட்டமைப்பின் ஆதரவினை பயன்படுத்தி இலங்கயில் ஜனநாயகம் நிலை நிறுத்தப்பட்டுள்ளது என்று சொன்னால் அந்த ஜனநாயக வாதிகளை தொடர்ந்து பயங்கரவாத குற்றத்தடுப்பு விசாரணைப் பிரிவிற்குள் விசாரணைக்கு அழைப்பது என்பது ஜனநாயக அத்துமீறல்.

தென்னிலங்கையில் ஜனநாயகத்தினை நிலை நிறுத்த வேண்டும் என்று போராடிக்கொண்டிருக்கும் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் சம்மந்தன் ஐயாவும் இதனை கருத்தில் கொள்ளவேண்டும்.

தமிழர்கள் செறிந்து வாழும் தாயக பகுதியில் ஜனநாயகம் குழிதோண்டி புதைக்கப்பட்டுள்ளது. இதனை மீட்பதற்க சம்மந்தன் ஐயா போராட வேண்டும். அவருக்கு முழுமையான ஆதரவினை வழங்குவதற்கு ஜனநாயக போராளிகள் கட்சி தயாராக உள்ளது.

இவ்வாறு நடைபெறும் சம்பவங்களை சர்வதேச நாடுகளுக்கும் எடுத்து சொல்லியுள்ளோம். தொடர்சியாக எங்களை சந்திக்கின்ற சர்வதேச இராஜ தந்திரிகள் முன்னாள் விடுதலைப்புலிகள் ஜனநாயகத்திற்கு திரும்பியுள்ளதை வரவேற்றுள்ளார்கள்.

உலகம் எங்களை ஏற்றுக்கொண்டுள்ளது. மீண்டும் எங்களை பயங்கரவாதிகள் என்று சித்தரிப்பதற்கான நடவடிக்கையில் இலங்கை அரசாங்கம் தொடர்ந்து செயற்பட்டுக் கொண்டிருக்கின்றது.

உலக நாடுகள் முழுதும் செயற்பாட்டுக் கொண்டிருக்கும் மனிதநேய அமைப்புக்களுக்கு நாங்கள் சொல்கின்றோம் தமிழர் தாயகத்தில் உள்ள மனிதாபிமான பிரச்சனைக்கு சரியான தீர்வினை முன்னெடுக்க வேண்டும்.

உலகத்திற்கு நாங்கள் சொல்லி நிக்கின்றோம் இங்கு ஒரு சரியான ஜனநாயகம் இல்லை, இதனை புலம்பெயர்ந்து வாழும் தமிழ்மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். நீங்கள் இருக்கின்ற ஒவ்வொரு நாடுகளிலும் அந்த நாட்டு பிரதிநிதிகளுக்கும் மனிதநேய அமைப்புக்களுக்கும் அழுத்தங்களை கொடுங்கள்.

தாயகத்தில் சரியான ஜனநாயகம் நிலைநிறுத்தப்படவில்லை. தமிழர்களின் பிரச்சனைக்கு தீர்வு காண்பதற்கான கதவுகள் திறக்கப்படவில்லை.

அதற்கான முனைப்புக்கள் எதுவும் இல்லை. ஒட்டுமொத்தமாக சிங்கள தேசத்தில் ஆட்சி அதிகாரங்களை கைப்பற்றுவதற்கான வேலைத்திட்டங்கள் தான் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது.

இதேவேளை இலங்கையின் அரச தலைவர் ஜனாதிபதி அவர்களுக்கும் நாங்கள் ஒரு கருத்தினை சொல்கின்றோம். போராளிகளின் ஜனநாயக செயற்பாடுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்.

நாட்டில் சுதந்திரமான ஜனநாயகம் இருக்க வேண்டும் என்பதையே நாங்கள் விரும்புகின்றோம் என்றும் ஜனநாயக போராளிகள் கட்சியின் பொது செயலாளர் இ.கதிர் தெரிவித்துள்ளார்.

Latest Offers