எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்தவா? சம்பந்தனா? மீண்டும் தலைதூக்கும் சட்ட சிக்கல்

Report Print Vethu Vethu in அரசியல்

நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி தலைவர் பதவி நியமிப்பு தாமதமாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச பொதுஜன பெரமுன கட்சியில் உறுப்புரிமையை பெற்றுக் கொண்டுள்ளார். இதன் காரணமாக அவர் நாடாளுமன்ற உறுப்பினர் என்ற உரிமையை இழந்துள்ளதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாக கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

தங்கள் எதிர்ப்பினை கடிதம் மூலம் எழுதி தன்னிடம் வழங்குமாறு சபாநாயகர் அறிவித்துள்ளதாக, தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் பிபிசி செய்தி சேவைக்கு குறிப்பிட்டுள்ளார்.

சமகாலத்தில் தேசிய அரசாங்கத்தில் இருந்து ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி வெளியேறி உள்ளது. இதன் காரணமாக பெரும்பான்மை உறுப்பினர்களை கொண்ட கட்சியின் உறுப்பினரான மஹிந்த ராஜபக்ஷவுக்கு, எதிர்க்கட்சி தலைவர் பதவியை வழங்குவதாக சபாநாயாகர் அறிவித்தார்.

எனினும் மஹிந்த ராஜபக்ச இன்னமும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர் அல்ல என்ற கருத்தை சுமந்திரன் முன்வைத்தார்.

அதற்கமைய எதிர்க்கட்சி தலைவர் யார் என தீர்மானிக்கும் நடவடிக்கையை எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை ஒத்தி வைப்பதாக சபாநாயகர் குறிப்பிட்டார்.

கடந்த 50 நாட்களுக்கு மேலாக பிரதமர் யார் என்பது தொடர்பில் பெரும் சர்ச்சை நிலை ஏற்பட்டு, உயர் நீதிமன்றத்தின் மூலம் தீர்த்து வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலும் சிக்கல் நிலைமை ஏற்பட்டுள்ளமையினால், நாடாளுமன்ற அமர்வுகளில் குழப்ப நிலை ஏற்படலாம் என பலரும் கருத்து வெளியிட்டுள்ளனர்.

எதிர்க்கட்சி தலைவராக மஹிந்த ராஜபக்ஷ, சபாநாயகர் அறிவித்துள்ள நிலையில் தற்போதும் குழப்ப நிலை ஏற்பட்டுள்ளது. இந்த குழப்பத்தை தீர்க்க மீண்டும் நீதிமன்றத்தின் உதவியை நாடக் கூடிய வாய்ப்புகள் உள்ளதாக அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

நேற்றைய தினம் வரையிலான காலப்பகுதியில் எதிர்க்கட்சித் தலைவராக தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் செயற்பட்டு வந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers