ஐக்கிய தேசிய கட்சிக்குள் வெடிக்கும் பூகம்பம்! பதவிக்காக திண்டாடும் உறுப்பினர்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

நாட்டில் கடந்த ஒக்டோபர் மாதம் 26ஆம் திகதி ஏற்பட்ட அரசியல் நெருக்கடி நிலைக்கு தற்போது தீர்வு காணப்பட்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையிலான புதிய அமைச்சரவை பதவியேற்கவுள்ள நிலையில், அமைச்சுக்களுக்கான அமைச்சர்களை தேர்வு செய்வதில் தற்போது குழப்ப நிலைகள் ஏற்பட்டுள்ளன.

அத்துடன், ஐக்கிய மக்கள் சுதந்திர கூட்டமைப்பிலிருந்து ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவதற்கு முயற்சிகளை மேற்கொள்ளும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும், அமைச்சுப் பொறுப்புக்களை ஏற்றுக்கொள்ள எத்தணிக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் கட்சிக்குள்ளும் அதற்கு வெளியிலும் பல எதிர்ப்புக்கள் கிளம்பியுள்ளன.

இந்நிலையில், முக்கியமான சிலரை அமைச்சர்களாக நியமிக்க ஜனாதிபதி எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

தயாசிறி ஜயசேகரவை ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்வாங்க அகிலவிராஜ் காரியவசம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

மகிந்த சமரசிங்கவை ஐக்கிய தேசிய கட்சிக்குள் உள்வாங்க ராஜித சேனாரத்ன எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் ஆறுமுகன் தொண்டமானை உள்வாங்க திகாம்பரம் எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

பைஸர் முஸ்தபாவை உள்வாங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஏ.எச்.எம்.பௌசி, முஜிபுர் ரஹ்மான் மற்றும் மரிக்கார் ஆகியோர் எதிர்ப்பு வெளியிட்டுள்ளனர்.

நிமல் சிறிபால டி சில்வாவை உள்வாங்க ஐ.தே.க நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்ணான்டோ எதிர்ப்பு வெளியிட்டுள்ளார்.

ரவி கருணாநாயக்கவிற்கு நிதி அமைச்சினை வழங்குவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்குள்ளேயே எதிர்ப்புக்கள் எழுந்துள்ளன.

டி.எம்.சுவாமிநாதனுக்கு மீண்டும் மீள்குடியேற்ற அமைச்சை வழங்க தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எதிர்ப்பு வெளியிட்டுள்ளது என அரசியல் வட்டாரத் தகவல்களில் இருந்து அறிய முடிகின்றது.