நரியை ஆதரிப்பது என்ற முடிவினையே தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் எடுத்துள்ளனர்

Report Print V.T.Sahadevarajah in அரசியல்

நாயை ஆதரிப்பதா? அல்லது நரியை ஆதரிப்பதா? என்ற விடயங்களை ஆராய்ந்த பிற்பாடே நரியை ஆதரிக்கும் முடிவினை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எடுத்துள்ளது என முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பா.அரியநேத்திரன் தெரிவித்துள்ளார்.

நேற்று, மஹிந்த ராஜபக்சவை விட ரணில் விக்ரமசிங்க நல்லவரா? அல்லது ரணில் விக்ரமசிங்கவை விட மஹிந்த ராஜபக்ச நல்லவரா? என வினவிய ஊடகவியலாளர் ஒருவரின் கேள்விக்கு பதிலளிக்கும்போது அவர் இதனை தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் குறிப்பிடுகையில்,

இலங்கையில் இருந்த ஜனாதிபதியாக இருக்கலாம், பிரதமராக இருக்கலாம் எவருமே தமிழ் மக்களுக்குரிய இனப்பிரச்சினைக்கு எந்தவிதமான தீர்வினையும் கொடுக்காதவர்கள் தான், அனைவரும் இனப்படுகொலைக்கு முன் நின்றவர்கள் தான்.

இரண்டு பேருமே தமிழ் மக்களால் ஏற்றுக் கொள்ளப்படாதவர்கள் தான், ஆனால் தற்போது ஜனாதிபதி தன்னிச்சையாக நாடாளுமன்றத்தினைக் கலைத்து பிரதமரை நியமித்தமை 19ஆவது அரசியலமைப்பு சட்டத்திற்கு முரணானது.

அதாவது பிரதமராக நியமிக்கப்பட்ட ரணில் மஹிந்த ஆகிய இருவரில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு யாரை ஆதரிக்க வேண்டும் எனபதே தற்போது உள்ள பிரச்சினையாகும்.

இதில் இரண்டு விடயம் வருகின்றது.

அதில் ஒன்று ஜனநாயகத்தை காப்பாற்ற வேண்டும். அந்த வகையில் ஜனநாயகத்திற்கு முரணாக வந்தவர் என்ற வகையில் தோற்கடிக்க வேண்டும் என்பது ஒன்று.

இரண்டாவது விடயம் வடக்கு மற்றும் கிழக்கு தமிழ் மக்கள் யாருக்கு வாக்களித்தோம் என்றால் இனப்படுகொலையாளியை எதிர்த்து வாக்களித்தோம் என்றனர்.

எமது இலக்கும் அதுதான் மைத்திரியை கொண்டு வருவோம் என்பது எமது இலக்கு அல்ல. இனப்படுகொலையாளியாக இருந்த ஒருவரை தோற்கடிக்க வேண்டும் என்பதே எமது இலக்கு ஆகும். இதற்காகத் தான் மக்கள் வாக்களித்தனர்.

இதற்கான கருவியாகத் தான் மைத்திரி நியமிக்கப்பட்டார். மைத்திரியுடன் கொண்ட காதலுக்காக தமிழ் மக்கள் வாக்களிக்கவில்லை.

அவ்வாறு தமிழ் மக்களால் புறந்தள்ளப்பட்டவரை நாடாளுமன்ற ஆயுள்காலம் முடிவதற்கு முதல் பிரதமராக கொண்டு வருவதற்கு நாங்கள் ஆதரிக்க முடியாது என்பதே இரண்டாவது விடயமாகும்.

இந்த விடயத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு ஆதரவு தெரிவித்தது தொடர்பாக இரண்டு விதமான கருத்து தற்போது நிலவுகின்றது.

அதாவது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலமை வகிக்க வேண்டும் என்பது ஒரு சாராருடைய கருத்தாகும்.

தீர்வுக்கான எழுத்து மூலமான ஆணையை பெற்று ஆதரவு தெரிவித்திருக்கலாம் என்பது மற்றைய கருத்தாக நிலவுகின்றது.

நடுநிலை என்பது தற்போதுள்ள நாடாளுமன்ற தொகையை வைத்துப் பார்த்தால் ஐக்கிய தேசியக் கட்சியிடம் போதுமான ஆசனங்கள் இருந்திருந்தால் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நடுநிலைமை வகித்திருக்கும். ஆனால் நிலமை அவ்வாறில்லை.

மாறாக எழுத்து மூலமான ஆணையை பெற்று ஆதரவு தெரிவித்திருக்கலாம் என்ற கருத்தினை எடுத்து பார்த்தால், ரணில் விக்ரமசிங்கவிடம் எழுத்து மூலமான ஆணையை மடையந்தான் வாங்குவான் காரணம் ரணில் தனித்து எதனையும் செய்ய முடியாது. ஜனாதிபதியும் நாடாளுமன்றத்தின் பொரும்பான்மையும் வேண்டும்.

இவற்றினை ரணில் செய்ய முடியாது. ஜனாதிபதியும் பிரதமரும் சேர்ந்தால் தான் எதனையும் செய்து முடிக்க முடியும். இந்த விடயத்தை வைத்துக் கொண்டே நாயை ஆதரிப்பதா? அல்லது நரியை ஆதரிப்பதா? என்ற வகையில் நரியை ஆதரிப்பது என்ற முடிவினை எடுத்துள்ளனர்.

சிங்களத் தலைமைகள் எவராக இருந்தாலும் அவர்களிடம் இனப்பற்றும், பேரினவாதமும் உண்டு உதாரணமாக எடுத்துக் கொண்டால், தற்போது சபாநாயகர் செய்த வேலையும் பிழையான விடயமாகவே தான் நான் பாரக்கின்றேன் நடுநிலையான சபாநாயகராக இருந்திருந்தால் மஹிந்தவை எதிர்க்கட்சி தலைவராக ஆராய்ந்த பிற்பாடே அறிவித்திருக்க வேண்டும்.

இரண்டு அறிவித்தலை விடுத்திருக்கின்றனர் இதில் இருந்து சிங்கள தலைமைகள் அனைவரும் இனரீதியான பற்று என்பது அவர்களுக்கு உண்டு என்பதில் மாற்று கருத்திற்கு இடமில்லை என அவர் இதன் போது தெரிவித்துள்ளார்.

Latest Offers