அரசாங்கத்தில் இணையும் சுதந்திரக் கட்சியினருக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்திற்கு ஆதரவளித்து அதில் இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவது என கட்சியின் மத்திய செயற்குழு தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் மகிந்தானந்த அளுத்கமகே தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழு நேற்று கூடிய போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அரசாங்கத்தில் அமைச்சு பதவிகள் எதனையும் பெற்றுக்கொள்ளாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் மகிந்தானந்த அளுத்கமகே இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான விரிவான கூட்டணி ஒன்றை அமைத்து வரும் நேரத்தில் வைக்கோல் மரத்தில் தொங்கிக் கொண்டிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சிக்கு ஒக்சிஜனை கொடுக்க முயற்சிக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எதிராக ஒழுக்காற்று விசாரணை நடத்துவது என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் புண்ணியத்தில் ஆட்சியமைத்துள்ள ஐக்கிய தேசியக் கட்சி அதில் இருந்து மீண்டும் பெரும்பான்மையை காட்ட வேண்டுமாயின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர் அரசாங்கத்தில் இணைய வேண்டும். அவ்வாறு ஐக்கிய தேசியக் கட்சியுடன் இணைவது மாபெரும் காட்டிக்கொடுப்பு எனவும் மகிந்தானந்த அளுத்கமகே மேலும் தெரிவித்துள்ளார்.

எது எப்படி இருந்த போதிலும் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, நாமல் ராஜபக்ச, மகிந்தானந்த அளுத்கமகே உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 50இற்கும் மேற்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக்கொண்டனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருந்து விலகி, வேறு கட்சியில் இணைந்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோகும் என்ற காரணத்தினால், மகிந்த ராஜபக்ச தரப்பு தற்போது தாம் இன்னும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலேயே இருப்பதாக கூறி வருகின்றனர்.

மகிந்த ராஜபக்ச உள்ளிட்டோர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்துக் கொண்டமை தொடர்பாக செய்திகள் ஊடகங்களில் வெளியாகியதுடன் சம்பந்தப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமூக வலைத்தளங்களில் புதிய கட்சியில் இணைந்தமைக்கான அங்கத்துவ அட்டைகளையும் பதிவேற்றியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.