எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளர் பதவியில் இருந்து விலகும் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, நாடாளுமன்ற எதிர்க்கட்சியின் பிரதான அமைப்பாளராக நேற்று நியமித்த மகிந்த அமரவீர, அந்த பதவியில் இருந்து விலக தீர்மானித்துள்ளதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உட்தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணியின் தீர்மானத்திற்கு அமையவே மகிந்த அமரவீர இந்த முடிவை எடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க ஒருங்கிணைப்பாளராக இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 23 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அணி, ஜனவரி 8 ஆம் திகதி ஜனாதிபதி மக்களுக்கு வழங்கிய வாக்குறுதியை யதார்த்தமாக மாற்ற, ஐக்கிய தேசிய முன்னணியுடன் கூட்டணியமைத்து, ஒக்டோபர் 26 ஆம் திகதிக்கு முன்னர் இருந்த நல்லாட்சி அரசாங்கத்தை மீண்டும் ஏற்படுத்த வேண்டும் என ஜனாதிபதிக்கு அழுத்தம் கொடுத்து வருகின்றனர்.

இந்த அணியில் அங்கம் வகித்த விஜித் விஜயமுனி சொய்சா, லக்ஷ்மன் செனவிரட்ன, இந்திக பண்டாரநாயக்க ஆகியோர் நேற்று நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சி வரிசையில் இருந்து ஆளும் கட்சி வரிசைக்கு சென்று அமர்ந்துக்கொண்டனர்.

இது சம்பந்தமாக நேற்றிரவு நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மத்திய செயற்குழுக் கூட்டத்தில் கடும் கருத்து மோதல்கள் ஏற்பட்டுள்ளது. தயாசிறி ஜயசேகர மற்றும் மகிந்த அமரவீர இடையில் இதன் போது கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

கட்சியில் இருந்து வெளியேறிய மற்றும் வெளியேறவிருக்கும் நபர்களுக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அது கடந்த காலத்திற்கு ஏதுவானதாக இருக்க வேண்டும் என்ற அடிப்படையில் இந்த கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது.

தயாசிறி ஜயசேகரவுக்கும் பைசர் முஸ்தபாவுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

2015 ஜனவரி 8 மற்றும் 2015 ஆகஸ்ட் 17 நடைபெற்ற தேர்தல்களுக்கு பின்னர், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஒரு கட்சியாக அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்க தீர்மானித்தது எனவும் அந்த சந்தர்ப்பத்தில் கட்சி அப்படியான தீர்மானத்தை எடுக்காது அரசாங்கத்தை அமைக்க ஆதரவளிக்க இடமளிக்க முடியாது என தென் மாகாண முதலமைச்சர் ஷான் விஜேலால் டி சில்வா குறிப்பிட்டுள்ளார்.

பேராசிரியர் காமினி சமரநாயக்க மற்றும் கலாநி்தி சரத் அமுனுகம ஆகியோர் இடையிலும் இந்த கருத்து மோதல் ஏற்பட்டுள்ளது. அப்போது குறுக்கிட்ட ஜனாதிபதி இந்த மோதலை நிறுத்தி விட்டு வேறு ஒன்றை பற்றி கவனம் செலுத்துவோம் என கூறியுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் நேற்றிரவு இரண்டு மணிநேரம் நடைபெற்றுள்ளது.

Latest Offers