மண்முனை மேற்கு பிரதேசசபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம்

Report Print Kumar in அரசியல்

மட்டக்களப்பு, மண்முனை மேற்கு பிரதேச சபையின் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் ஏகமனதாக இன்று நிறைவேற்றப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய கூட்டமைப்பினால் ஆட்சியமைக்கப்பட்டுள்ள மண்முனை மேற்கு பிரதேசசபையின் வரவு-செலவுத்திட்ட சமர்ப்பிற்கான விசேட அமர்வு இன்று காலை தவிசாளர் எஸ்.சண்முகநாதன் தலைமையில் ஆரம்பமானது.

இந்த அமர்வில் உபதவிசாளர் பொன். செல்லத்துரை, 16 பிரதேசசபை உறுப்பினர்களும் கலந்துகொண்டதுடன் சபையின் செயலாளர் சர்வேஸ்வரனும் கலந்துகொண்டர்.

இதன்போது சென்ற கூட்டறிக்கை வாசிக்கப்பட்டு திருத்தங்களுடன் உறுப்பினர்களினால் ஏற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

அத்துடன் 2019ஆம்ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் தவிசாளரினால் சபையில் முன்வைக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் விவாதங்கள் இடம்பெற்றன.

இதன்போது வரவு-செலவுத்;திட்டம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள்முன்வைக்கப்பட்டதுடன் சபையின் செயற்பாடுகள் தொடர்பிலும் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

அதனைத்தொடர்ந்து தவிசாளர் பகிரங்க வாக்கெடுப்புக்கு கோரியபோது இரகசிய வாக்கெடுப்பு வேண்டும் என சிலர் கூற அங்கு பல்வேறு கருத்துமோதல்கள் நடைபெற்றதை தொடர்ந்து சபை 10 நிமிடங்கள் ஒத்திவைக்கப்பட்டது.

மீண்டும் சபை கூடிய நிலையில் தமது திருத்தங்களை ஏற்றுக்கொள்ளும்பட்சத்தில் வரவுசெலவுத்திட்டத்திற்கு பூரண ஆதரவளிப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பிரதேசபை உறுப்பினர் சிறிதரன் சபையில் தெரிவித்ததை தொடர்ந்து அதனை தவிசாளர் ஏற்றுக்கொண்ட நிலையில் 2019ஆம் ஆண்டுக்கான வரவு-செலவுத்திட்டம் ஏகமனதாக நிறைவேற்றப்பட்டது.

இதன்போது நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் சபையின் நடவடிக்கைகளில் தலையிடுவதாகவும் அவற்றினை நிறுத்தவேண்டும் எனவும் சில உறுப்பினர்களினால் கருத்துகள் முன்வைக்கப்பட்டன.

எனினும் பல்வேறு அபிவிருத்தி திட்டங்களை நாடாளுமன்ற உறுப்பினர் சிறிநேசன் தமது பகுதிக்கு கொண்டுவருவதாகவும் ஆனால் பிரதேசபையின் செயற்பாடுகளில் அவரது தலையீடுகள் இல்லையெனவும் தவிசாளர் இதன்போது தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரதேசசபையின் வருமானத்தினை அதிகரிப்பதற்கான வழிவகைகளை தவிசாளர் முன்னெடுக்கவேண்டும் எனவும் பிரதேசபைக்கு வரும் வருமானங்களை மட்டும் நம்பியிருக்காமல் புதிய வருமானங்களை தேடிப்பெறவேண்டும் எனவும் பிரதேசசபை உறுப்பினர் குகநாதன் இதன் போது வலியுறுத்தினார்.

பிரதேசசபை உறுப்பினர்கள் மத்தியில் பாகுபாடுகாட்டப்படுவதுடன் சில பகுதிகள் புறக்கணிக்கப்படுவதாகவும் இங்கு குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.

எனினும் தமது பதவிக்காலத்தில் எந்தவித பாகுபாடும் காட்டுப்படாது என்பதுடன் அனைத்து பகுதிகளிலும் சமமாக பார்க்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers