தனிமனிதன் 225 பேரின் தலைவிதியை தீர்மானிப்பது ஜனநாயகம் அல்ல! ஸ்ரீநேசன்

Report Print Gokulan Gokulan in அரசியல்

நிறைவேற்று அதிகார முறையே நாட்டை சர்வாதிகார ஆட்சியை நோக்கி இட்டுச்செல்கின்றது என நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீநேசன் குறிப்பிட்டுள்ளார்.

பிரதி சபாநாயகர் தலைமையில் இன்று கூடிய நாடாளுமன்ற அமர்வின் சபை ஒத்திவைப்புவேளை பிரேரணை மீதான விவாதத்தின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,

“1978ஆம் ஆண்டு இரண்டாம் குடியரசு யாப்பில் கொண்டுவரப்பட்ட இந்த ஜனாதிபதித்துவ முறையினை ஆட்சிக்கு வந்த ஜனாதிபதிகள் சட்டம், நிர்வாகம், பாதுகாப்பு துறையில் பிரயோகித்த விதம் எமக்கு நன்கு தெரியும்.

இந்த ஜனாதிபதி முறையை அகற்றுமாறு கோரிய இந்த பிரேரணையை நாம் ஆதரிக்கின்றோம். இந்த அதிகாரம் எந்தளவு பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதென நாம் பார்க்கின்றோம்.

ஐந்து ஆண்டுகளுக்கு மக்கள் ஆணை கொடுத்துள்ளார்கள். எந்தெந்த கட்சியில் 225 பேரும் தெரிவுசெய்யப்பட்டனரோ அந்த கட்சியில் இருந்து மக்களுக்கு பணியாற்ற வேண்டும்.

அதற்கு மக்கள் ஆணை கொடுக்கின்றனர். ஆனால், தனிமனிதன் 225 பேரின் தலைவிதியை தீர்மானிப்பது ஜனநாயகம் அல்ல அது சர்வாதிகாரம்.

நாடாளுமன்றத்தை, மக்கள் ஆணையை கேலிக்கூத்தாக்கி இவ்வாறான விடயங்களை செய்யத் தூண்டியது நிறைவேற்று அதிகார முறையே. இது நாட்டை சர்வாதிகாரத்தை நோக்கி இட்டுச்செல்கின்றது எனவும் தெரிவித்துள்ளார்.