மகிந்த அணியினருக்கு கெட்டகாலம்! ஜாதகம் பார்க்குமாறு யோசனை முன்வைத்த முக்கியஸ்தர்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தரப்பினர் செல்லும் இடங்களில் எல்லாம் தற்போது பிரச்சினைகளை எதிர்நோக்கி வருவதாக ஐக்கிய தேசிய முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.

அலரி மாளிகையில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

திருட்டுத்தனமாக சென்று பிரதமர் பதவியை ஏற்றார் பிரச்சினை ஏற்பட்டது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டது. சம்பந்தன் தானே எதிர்க்கட்சித் தலைவர் என்கிறார். தற்போது இரண்டு எதிர்க்கட்சித் தலைவர்கள் இருக்கின்றனர்.

பெரிய சண்டியர்கள் போன்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவிற்கு சென்று அங்கத்துவத்தை பெற்றுக்கொண்ட வீரர்கள், தற்போது திருட்டுத்தனமாக இளநீர் பறித்து பாடசாலை அதிபரிடம் மாட்டிக்கொண்டதும், நாங்கள் திருடவில்லை என்று கூறும் நிலைமைக்கு சென்றுள்ளனர்.

மகிந்தானந்த அளுத்கமகே போன்றவர்கள் கையும் களவுமாக பிடிப்படும் பொய்களை கூறுகின்றனர். பொய் கூறுவதற்கு ஒரு முறையுள்ளது. அவர்கள் இதுவரை காலமும் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பெயர் பலகையை தமது பின்னால், வைத்தே ஊடக சந்திப்புகளை நடத்தினர்.

ஆனால், பின்னால் இருக்கும் கட்சி பெயர் பலகையை கறுப்பு துணியால் மூடி விட்டு நேற்று ஊடக சந்திப்பை நடத்தினர். பெயர் பலகையை அங்கிருந்து அகற்றாமல், கறுப்பு துணியால் மூடி விட்டு நாங்கள் பொதுஜன பெரமுனவில் இல்லை எனக் கூறி ஊடக சந்திப்பை நடத்தினர்.

இப்படியான முட்டாள் கதைகளை கூறுவோரே அரசாங்கத்தை அமைக்க முயற்சித்தனர். இவை முன்பள்ளி மாணவர்கள் செய்யும் வேலை. திருட்டு வேலையையும் சரியாக செய்ய தெரியவில்லை. செய்வதெல்லாம் திருட்டு வேலைகள் அவற்றையும் சரியாக செய்ய தெரியவில்லை.

பிரதமர் பதவியை திருடினர் அதிலும் மாட்டிக்கொண்டனர். அந்த திருட்டை நாங்கள் மிகவும் சிரமப்பட்டு முறியடித்தோம். மறுபடியும் திருட்டு வேலை ஒன்றை செய்ய முயற்சித்து வருகின்றனர். நாங்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இல்லை நாங்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் இருக்கின்றோம் என்று கூறுகின்றனர்.

இவர்கள் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து கொண்டனர் என்பது அனைவரும் அறிந்தது. ஊடகங்களில் செய்திகளும் வெளியாகியது. உள்ளூராட்சி சபைத் தேர்தலிலும் தாமரை மொட்டுச் சின்னத்தில் போட்டியிட்டு, அதன் பின்னரே மேடைகளில் ஏறி பெரிதாக பேசினர்.

உள்ளூராட்சி சபைத் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி தனித்து போட்டியிட்டது. சில உள்ளூராட்சி சபைகளில் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியும் தனித்து போட்டியிட்டது. மகிந்த ராஜபக்ச தலைமையில், தாமரை மொட்டுச் சின்னத்தில் தனித்து போட்டியிட்டனர்.

அப்படி போட்டியிட்டு தாமரை மொட்டுச் சின்னத்தை முன்னோக்கி கொண்டு சென்றவர்கள், தாம் தாமரை மொட்டுச் சின்னத்தில் இல்லை என தற்போது கூறுகின்றனர். இது என்ன கேலிக்கூத்து.

நாங்கள் தாமரை மொட்டு கட்சியினர் என்று கூற இவர்களுக்கு ஆத்ம சக்தியும் தைரியமும் இல்லை. அச்சம் கொண்டுள்ளனர். ஏன் அஞ்ச வேண்டும்.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி கிடைக்காது, நாடாளுமன்ற உறுப்பினர் பதவி பறிபோய்விடும் என்ற அச்சத்தில் தாம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் உறுப்பினர் இல்லை என்று கூறுகின்றனர். இவற்றை பார்க்கும் போது எமக்கு சிரிப்பு வருகிறது. மகிந்த ராஜபக்ச தரப்புக்கு கெட்ட காலம் ஏற்பட்டுள்ளது. பிரதமர் பதவியை திருட முயற்சித்தனர் முடியவில்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பதவியை பெற முயற்சித்து வருகின்றனர். அதற்கு தற்போது நாடாளுமன்றத்திற்குள் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. எதிர்க்கட்சித் தலைவர் பதவியும் பறிப்போய்விடுமோ என்ற அச்சம் இவர்களுக்கு ஏற்பட்டுள்ளது.

மகிந்தானந்த உட்பட மகிந்த ராஜபக்ச தரப்பினர் தமது ஜாதகங்களை பார்க்குமாறு யோசனை முன்வைக்கின்றேன். அவர்கள் மேற்கொள்ளும் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைவதே இதற்கு காரணம் எனவும் முஜிபுர் ரஹ்மான் குறிப்பிட்டுள்ளார்.