பொது மக்களின் பணத்தை அபகரித்து ஏமாற்றிவிட்ட தமிழ் அரசியல் பிரமுகர்! அம்பலப்படுத்தும் தேரர்

Report Print Jeslin Jeslin in அரசியல்

ஆறுமுகன் தொண்டமானுக்கு இந்தியாவில் பெரியளவிலான வீடு உள்ளது. அவர் மக்களின் பணத்தை அபகரித்து வாழ்கின்றாரே தவிர மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை என நலச்சேவை சங்கத்தின் பொதுச் செயலாளர் பத்தரமுல்ல சீலரதன தேரர் தெரிவித்துள்ளார்.

மேலும், தற்போது பதவியை பெற்றுக்கொண்டுள்ள திகாம்பரம் இந்த மக்களின் பிரச்சினைக்கு தீர்வை பெற்றுக்கொடுக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தோட்டத் தொழிலாளர்களுக்கு அடிப்படை சம்பளமாக ஆயிரம் ரூபாவை வழங்க வேண்டும் என வலியுறுத்தி கோட்டைப் புகையிரத நிலையத்திற்கு முன்பாக மூன்று இளைஞர்கள் முன்னெடுத்துள்ள உண்ணாவிரதப் போராட்டம் இன்றுடன் மூன்றாவது நாளாகவும் தொடர்ந்தது.

நேற்று முன்தினம் புதன்கிழமை இரவு போராட்டக்காரர்களை அங்கிருந்து அகற்றுவதற்கு முற்பட்ட போதிலும் கூட, இன்றைய தினமும் போராட்டம் இடம்பெற்றது.

இந்நிலையில் அவ்விடத்திற்கு வந்த குறித்த இளைஞர்களுடன் உரையாடிய பத்தரமுல்ல சீலரத்ன தேரர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

தொடர்ந்து கருத்து தெரிவித்த அவர்,

தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காகவே இந்த மூன்று இளைஞர்களும் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். பிரதமர் ரணில் விக்ரமசிங்க நீதிமன்றம் சென்று 19ஆவது அரசியலமைப்பு சீர்திருத்தத்தின் ஊடாக போராடி பதவியைப் பெற்றுவிட்டார். அதற்குள் பல்வேறு அமைச்சுப் பதவிகளும் வழங்கப்பட்டு, அமைச்சரவை நியமனம் இடம்பெற்றுள்ளது.

ஆனால் இங்கு போராடிக் கொண்டிருக்கும் ஏழைகளின் வாக்குகளில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவான பிரதிநிதிகளுக்கு மக்கள் நலன் தொடர்பில் அக்கறையில்லை.

தோட்டத் தொழிலாளர்கள் என்போர் சாதாரணமானவர்கள் அல்ல. பிரித்தானியரின் காலத்தில் தோட்டத் தொழிலாளர்களின் தேவைகள் நிறைவுசெய்யப்பட்டன.

அதேவேளை பழனி திகாம்பரம் மலைநாட்டு புதிய கிராமங்கள், உட்கட்டமைப்பு வசதி மற்றும் சமூக அபிவிருத்தி அமைச்சைப் பெற்றுக் கொண்டுள்ளார்.

அவரிடம் இந்த தோட்டத் தொழிலாளர்களுக்கு ஆயிரம் ரூபாவை அடிப்படை சம்பளமாகப் பெற்றுக்கொடுக்க வேண்டும் எனக் கேட்டுக்கொள்கின்றோம்.

அத்தோடு ஆறுமுகன் தொண்டமானுக்கு இந்தியாவில் பெரியளவிலான இல்லம் உள்ளது. அவர் மக்களின் பணத்தை அபகரித்து வாழ்கின்றாரே தவிர மக்களுக்கு எவ்வித நன்மையையும் செய்யவில்லை என குறிப்பிட்டுள்ளார்.