பிரதமர் செயலகத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு அவசர கலந்துரையாடல்

Report Print Sujitha Sri in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அழைப்பின் பேரில் இன்று காலை பிரதமர் செயலகத்தில் அவசர கலந்துரையாடலொன்று நடைபெற்றுள்ளது.

இதன்போது கிளிநொச்சி உள்ளிட்ட பகுதிகளில் அண்மையில் ஏற்பட்ட வெள்ள அனர்த்தம் தொடர்பில் பேசப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த கலந்துரையாடலில் உடனடியாக நிவாரணம் வழங்குதல் மற்றும் நேற்று இரவில் இருந்து இன்று வரை தொடர்ந்து பெய்து கொண்டிருக்கும் மழை வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண தேவையை பூர்த்தி செய்தல் போன்ற விடயங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன.

கிளிநொச்சி, முல்லைத்தீவு போன்ற மாவட்டங்களில் முற்றாக பாதிக்கப்பட்டுள்ள அனைத்து மக்களுக்கும் உடனடி நிவாரணம் வழங்குதல், அதற்கான உணவுப் பொருட்களை அனுப்பி வைத்தல் மற்றும் அவர்களின் சேதமடைந்த தற்காலிக வீடுகளை புனரமைப்பு செய்தல் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட வீதிகள், பாலங்கள் என்பவை தொடர்பிலும் பேசப்பட்டுள்ளன.

முதலாவதாக மக்களின் சுகாதாரம் அவருடைய உணவு போன்ற விடயங்கள் தொடர்பில் அக்கறை செலுத்தப்பட்டு அதற்குரிய நிதி வசதிகளை அரசாங்கத்தின் ஊடாக ஏற்படுத்தி அனைத்து மக்களுக்கும் ஒரு கிழமைக்கு அல்லது இரண்டு வாரங்கள் உலர் உணவுகளை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.

அத்துடன் உடனடியாக அவர்கள் எல்லோருக்கும் முதல் கட்டமாக 10,000 ரூபா நிவாரண நிதி வழங்குதல் அதனூடாக அவர்கள் தங்கள் தேவைகளை பூர்த்தி செய்தல் தொடர்ந்து அடுத்தடுத்த கட்டமாக பல திட்டங்களை உருவாக்குதல் போன்ற விடயங்கள் தொடர்பில் ஆராயப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பில் நல்ல முடிவு எடுக்கப்படும் எனவும், தொடர்ந்து நாளையும் அரசாங்க அதிபர்கள் மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களுடைய இது தொடர்பான அவசர கலந்துரையாடல் இடம்பெற உள்ளதாகவும் தெரியவருகிறது.

இந்த கலந்துரையாடலில் அனர்த்த முகாமைத்துவ அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன, கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers