பிரதமராக பதவியேற்ற மகிந்த ராஜபக்ச! ஐ.தே.கவிற்கு அமைச்சு பதவி - வசந்த அலுவிகார தெரிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் சில நாடாளுமன்ற உறுப்பினர்கள் அமைச்சு பதவிகளை கேட்டு ஊடகங்களில் அச்சுறுத்துவதை தாம் பார்த்ததாகவும், அது தவறானது எனவும், அவற்றை அனுமதிக்க முடியாது எனவும் ராஜாங்க அமைச்சர் வசந்த அலுவிகார தெரிவித்துள்ளார்.

அலுவிகார, கமத்தொழில், நீர்பாசன மற்றும் கிராமிய அபிவிருத்தி ராஜாங்க அமைச்சராக நேற்று அமைச்சில் கடமைகளை பொறுப்பேற்று கொண்ட பின்னர் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார். மேலும் கூறுகையில்,

“கடந்த தேர்தலில் ஐக்கிய தேசிய முன்னணி மாத்தளை மாவட்டத்தில் வெற்றி பெற்றது. எனினும் எனக்கு ராஜாங்க அமைச்சர் பதவியே கிடைத்துள்ளது.

பதவிகளை விட மக்களே முக்கியம். மாத்தளைக்கு மாற்றாந்தாய் மனப்பான்மை காட்டப்படுவதாக மக்கள் என்னிடம் கேள்வி எழுப்புகின்றனர். 19ஆவது அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின்படி அமைச்சரவையின் எண்ணிக்கை 30 என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

கட்சியின் தலைமைக்கு பல பிரச்சினைகள் உள்ளன. இதனால், நாம் இந்த சந்தர்ப்பத்தில் பதவிகளை விட மக்கள், கட்சி அரசாங்கம் பற்றியே சிந்திக்க வேண்டும்.

அடுத்த ஆண்டு தேர்தல் ஆண்டு, அரசாங்கம் எமது கையில் இல்லாமல் எம்மால் வெற்றி பெறுவது சிரமம். எமக்கு தற்போது அரசாங்கம் உள்ளது.

அந்த பலத்தில் நாம் தேர்தலை நடத்துவோம். மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற போது, அவரது அணியினர் தமக்கு அமைச்சர் பதவி வேண்டாம் ஐக்கிய தேசியக்கட்சியில் இருந்து வருவோருக்கு கொடுங்கள் என கூறினர்.

அரசாங்கம் தேவை என்பதால், அவர்கள் அந்த அர்ப்பணிப்பை செய்ய முன்வந்தனர். அரசாங்கம் இன்றி தேர்தலில் வெற்றி பெற முடியாது என்பது அவர்களுக்கு தெரியும்.

அடுத்த சில மாதங்களில் மீண்டும் கிராம புரட்சி அபிவிருத்தித் திட்டம் போன்று கிராமத்திற்கு அபிவிருத்தியை கொண்டு வரும், வேலை வாய்ப்புகளை வழங்கும் பல வேலைத்திட்டங்களை துரிதமாக ஆரம்பிக்க உள்ளோம்” என வசந்த அலுவிகார குறிப்பிட்டுள்ளார்.