ஏன் விடுதலைப் புலிகள் அனுமதி கொடுத்தார்கள்? சுமந்திரன் சொன்ன விளக்கம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடையாக இருந்தனர் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

யாழில் உள்ள அவரது இல்லத்தில் இன்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும்போதே இதனைத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில், அண்மையில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் முன்னாள் வடமாகாணசபை உறுப்பினர் சயந்தன், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விடுதலைப் புலிகளுடனான டீலில் உருவானது என கருத்துத் தெரிவித்துள்ளார், இது தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேள்வி எழுப்பியபோது எம்.ஏ.சுமந்திரன் இந்த கருத்தினை வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவான போது நான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் இருக்கவில்லை. அதனால் எந்தவிதமான டீல் நடந்தது என்றோ , அல்லது டீல் நடந்ததா ? என்பது பற்றி எனக்கு தனிப்பட்ட அறிவு கிடையாது, ஆனாலும் பொதுவாக எல்லோருக்கும் தெரிந்த உண்மை இருக்கின்றது.

அது என்னவெனில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு முன்னர் தமிழ் அரசியல் கட்சிகள் ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதற்கு விடுதலைப்புலிகள் தடை விதித்திருந்தனர்.

அதனை மீறி ஜனநாயக அரசியலில் ஈடுபட்டவர்கள் அதனை மீறியமைக்காக படுகொலை செய்யப்பட்டனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் உருவாக்கத்திற்கு பின்னரே தமிழ் அரசியல் கட்சிகள் அரசியலை முன்னெடுக்க விடுதலைப்புலிகள் இணங்கினார்கள்.

விடுதலைப்புலிகள் பேச்சுவார்த்தைகளுக்கு வரும் போது அதன் இடைநடுவில் செயற்பட்ட நோர்வே போன்ற நாடுகள் அவர்களுக்கும் ஜனநாயக சக்தி இருப்பது அவசியம் என வலியுறுத்தி இருந்தனர்.

அவ்வாறு இருந்தாலே சர்வதேச நாடுகளுடன் பேச முடியும், இலங்கை அரசாங்கத்துடன் பேசி சில இணக்க பாடுகளை ஏற்படுத்த முடியும் என்ற ஆலோசனைகளை விடுதலைப்புலிகளுக்கு பல நாடுகள் கொடுத்தன.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கத்தின் போது ஜனநாயக ரீதியில் அரசியலை முன்னெடுத்தவர்களினதும் , புலிகளினதும் தேவைப்பாடுகளும் சந்தித்தன. அதனாலேயே ஜனநாயக ரீதியில் அரசியல் செய்வதற்கான அனுமதி விடுதலைப்புலிகளால் கொடுக்கப்பட்டது என தெரிவித்தார்

Latest Offers