கிளிநொச்சியில் அனர்த்த நிலைமைகளை நேரில் சென்று ஆராய்ந்த அமைச்சர் ராஜித!

Report Print Suman Suman in அரசியல்

சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உள்ளிட்ட அமைச்சின் உயரதிகாரிகள் கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவுப் பகுதியில் வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு இன்று (29) நேரடியாகச் சென்று பார்வையிட்டனர்.

இடைத்தங்கல் முகாம்களில் தங்கியிருந்த மக்களுடன் அளவளாவி சுகாதார சேவைகள் குறித்து மக்களது கருத்துகளைக் கேட்டறிந்த அமைச்சர் மட்டக் குழுவினர் பின்னர் அம்மக்களுக்காக ஐந்து பார ஊர்திகளில் எடுத்து வந்திருந்த நிவாரணப் பொருட்களைப் பகிர்ந்தளித்தனர்.

இச்சுற்றுப்பயணத்தின் இறுதியில் கிளிநொச்சி சுகாதார சேவைகள் பணிமனையில் விசேட கலந்துரையாடல் ஒன்றும் இடம்பெற்றது.

மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மற்றும் செயலாளர், கிளிநொச்சி அரச அதிபர், கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்ட சுகாதாரத்துறை உயரதிகாரிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் அனர்த்த கால சுகாதார சேவைப் பணிகளது மீளாய்வு மற்றும் எதிர்கால இடர்தவிர்ப்பு மற்றும் இடர் முன்னாயத்தம் ஆகிய விடயங்கள் கலந்துரையாடப்படவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.

சுகாதாரத் திணைக்கள வட்டாரங்களில் இருந்து கிடைக்கும் தகவல்களின் அடிப்படையில் மேற்படி விடயம் தவிர்த்து சுகாதாரத்துறையின் ஆளணிகளை அதிகரிப்பது, புதிய கட்டடங்களை நிர்மாணிப்பது ஆகிய பொதுவான அபிவிருத்தி தொடர்பான விடயங்களே பிரதானமாகக் கலந்துரையாடப்பட்டதாகத் தெரியவருகிறது.

இதேவேளை, சுகாதார அமைச்சரின் விசேட அழைப்பின் பேரில் வருகை தந்திருந்த முன்னாள் வடமாகாண சுகாதார அமைச்சர் மருத்துவர் சத்தியலிங்கத்துடன் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நடாளுமன்ற உறுப்பினர்களான மருத்துவர் சிவமோகன், சாந்தி சிறிஸ்கந்தராஜா, மாகாண மற்றும் மாவட்ட சுகாதாரத்துறை உயர் அதிகாரிகள் ஆகியோரும் இணைந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers