மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டதை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட வழக்கை திரும்ப பெற நடவடிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்

மஹிந்த ராஜபக்ச, பிரதம மந்திரியாக நியமிக்கப்பட்டமையை ஆட்சேபித்து தாக்கல் செய்யப்பட்ட இடைக்கால தடையுத்தரவு வழக்கை திரும்ப பெற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுவதாக ஆங்கில செய்தித்தாள் ஒன்று கூறுகிறது.

தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள், நடப்பு அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொள்ளும் வகையிலேயே இந்த வழக்கு திரும்ப பெற்று கொள்ளப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போதைய அரசாங்கத்துடன் இணைந்துள்ள ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் ஏற்கனவே மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கத்திலும் அமைச்சர்களாகவும், பிரதியமைச்சர்களாகவும் பதவி வகித்தனர்.

அந்த சூழ்நிலையில் 122 நாடாளுமன்ற உறுப்பினர்கள் மஹிந்த ராஜபக்சவுக்கும், அவரின் அமைச்சரவைக்கும் எதிராக தாக்கல் செய்த வழக்கு காரணமாக, அனைவரின் பதவிகளும் மேன்முறையீட்டு நீதிமன்றத்தினால் இடைநிறுத்தப்பட்டன.

இந்த வழக்கின் மீது விசாரணை நடத்திய மேன்முறையீட்டு நீதிமன்றம் இடைக்கால தடையுத்தரவை விதித்த நிலையில் மஹிந்த ராஜபக்சவும் பதவி விலகினார்.

எனவே இந்த வழக்கை தொடர்ந்தும் முன்கொண்டு செல்லவேண்டிய அவசியம் தற்போதைக்கு இல்லை.

இந்தநிலையில் குறித்த வழக்கை திரும்பப் பெற்றுக் கொண்டால், தற்போது அரசாங்கத்துடன் இணைந்திருக்கும் மனுஸ நாணயக்கார, ஏ.எச்.எம்.பௌசி, விஜித் விஜயமுனி சொய்ஸா, லக்ஷ்மன் செனவிரட்ன மற்றும் இந்திக பண்டாரநாயக்க ஆகியோருக்கு அமைச்சு மற்றும் பிரதியமைச்சுப் பொறுப்புக்களை வழங்க முடியும் என்று கூறப்படுகிறது.

ஐக்கிய தேசியக் கட்சியை பொறுத்தவரை இந்த நிலைமைகளை சரிசெய்வதன் மூலம் தேசிய அரசாங்கம் ஒன்றை அமைக்க முடியும் என்று எதிர்ப்பார்க்கிறது.

அதற்கு நாடாளுமன்றத்தின் அங்கீகாரமும் தேவை. எனினும் அரசியலமைப்பில் உள்ள குறைப்பாடுகளை வைத்து கொண்டு தேசிய அரசாங்கம் ஒன்றை அமைப்பதற்கான முனைப்புக்களுக்கு தாம் ஆதரவு வழங்க போவதில்லை என்று ஜே.வி.பி ஏற்கனவே தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.