மைத்திரியை தொடரும் சந்திரிக்கா பீதி - ஆளுநர்களை பதவி விலகுமாறு அறிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க மீதுள்ள அரசியல் ரீதியான அச்சம் காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் உள்ள சந்திரிக்கா மற்றும் அவரது ஆதரவாளர்களிடம் இருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமையை தற்காத்துக்கொள்ள ஜனாதிபதி சில அதிரடியான நடவடிக்கைகளை எடுத்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், சில மாகாணங்களின் ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன அறிவித்துள்ளதாக தெரியவருகிறது.

நேற்றைய தினத்திற்கு முன்னர் விலகுமாறு அறிவித்திருந்ததாகவும் அரசியல் பக்கசார்பு சம்பந்தமான பிரச்சினை காரணமாகவே ஆளுநர்களை பதவி விலகுமாறு ஜனாதிபதி அறிவித்துள்ளதாகவும் பேசப்படுகிறது.

பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ள ஆளுநர்கள், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவுக்கு ஆதரவானவர்கள் என தெரிவிக்கப்படுகிறது.

இதற்கு அமைய வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே தனது பதவி விலகல் கடிதத்தை ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆளுநர் ரெஜினோல்ட் குரே, ஓரளவு வடக்கு மக்களின் ஆதரவை பெற்ற நபராவார்.

பதவி விலகுமாறு கோரப்பட்டுள்ள ஏனைய ஆளுநர்கள் தொடர்பான தகவல்கள் கசியவில்லை. நாட்டில் உள்ள 9 மாகாணங்களில் 6 மாகாணங்களின் பதவிக்காலம் நிறைவடைந்துள்ளதுடன் ஆளுநர்களின் ஆட்சியில் அந்த மாகாணங்கள் இருந்து வருகின்றன.