அர்ஜூன் அலோசியஸ் பிணையில் விடுதலை

Report Print Steephen Steephen in அரசியல்

இலங்கை மத்திய வங்கியின் பிணை முறி மோசடி விவகாரம் தொடர்பாக சுமார் ஒரு வருட காலம் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பேர்ப்பச்சுவல் ட்ரெசரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜூன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் நிறைவேற்று அதிகாரி கசுன் பலிசேன ஆகியோரை பிணையில் விடுதலை செய்யுமாறு கொழும்பு பிரதான நீதவான் லங்கா ஜானகி ஜயரத்ன இன்று உத்தரவிட்டுள்ளார்.

இதனடிப்படையில், இருவரும் தலா ஒரு மில்லியன் மற்றும் தலா 20 மில்லியன் ரூபாய் பெறுமதியான 4 சரீரப் பிணைகளில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டதுடன் சரீரப் பிணை வழங்கும் நபர்கள் நெருங்கிய உறவினர்களாக இருக்க வேண்டும் எனவும் நிபந்தனை விதித்துள்ளார்.

பிணை வழங்கும் நபர்கள் தமது வதிவிடங்களை உறுதிப்படுத்தும் சான்றிதழ்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டார். அத்துடன் சந்தேக நபர்களின் தேசிய அடையாள அட்டைகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்க வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

இதனை தவிர சந்தேக நபர்கள் வெளிநாடு செல்ல முற்றாக தடைவிதித்த நீதவான், கடவுச்சீட்டுகளை நீதிமன்றத்தில் ஒப்படைக்குமாறும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

மேலும் வாராந்தோறும் ஞாயிற்றுக் கிழமைகளில் காலை 9 முதல் 12 மணி வரையான காலப் பகுதிக்குள் குற்றப் புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராக வேண்டும் எனவும் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

அர்ஜூன் அலோசியஸ் மற்றும் கசுன் பலிசேன ஆகியோர் சார்பில் பிணை கோரி ஆஜரான சட்டத்தரணிகள், சந்தேக நபர்களின் பிள்ளைகள் மற்றும் மனைவிமார் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அதனை விசேட நிலைமையாக கருதி, சந்தேக நபர்களை பிணையில் விடுதலை செய்யுமாறு ஏற்கனவே கோரிக்கை விடுத்திருந்தனர்.

இதனை ஏற்றுக்கொண்ட நீதவான், பிரதான சந்தேக நபர் அர்ஜூன் மகேந்திரன் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதாலும் விசாரணை முடிவடையும் காலம் எப்போது என்பது நிச்சயம் இல்லை என்பதாலும் அதனையும் விசேட காரணமாக கருதி சந்தேக நபர்களை பிணையில் விடுவிப்பதாகவும் நீதவான் அறிவித்துள்ளார்.