தாய்லாந்திலிருந்து திரும்பிய மைத்திரி! ரணிலின் அமைச்சரவைக்கு கொடுக்கும் அதிர்ச்சி வைத்தியம்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ரணில் தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணியை ஆட்சியமைக்க சந்தர்ப்பத்தைக் கொடுத்துவிட்டு அரசாங்கத்தின் நடவடிக்கைகளை முன்னெடுப்பதை தடுக்கும் முறையிலான வழிவகைகளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மேற்கொண்டுவருகிறார் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.

அரச நிறுவனங்களின் ஊடாக நிர்வமாகப் பணிகளை முன்னெடுப்பதில் ரணில் விக்ரமசிங்க அரசாங்கம் சிக்கல்களை எதிர்நோக்கி வருவதாகவும் பேசப்படுகிறது.

குறிப்பாக, அமைச்சர்களின் மூலமாக வழங்கப்படும் முக்கிய அரச நிறுவனங்களின் நியமனங்களில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் அதிகாரத்திற்குட்பட்ட தலையீடும் ஏற்படுத்தப்படுகிறது.இ

இவ்வாறான நிலையில், அமைச்சர்களினால் மேற்கொள்ளப்படும் அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களின் நியமனங்கள் தொடர்பாக பரிசீலிப்பதற்காக, தனது செயலர் உதய செனிவிரத்ன தலைமையிலான குழுவொன்றை மைத்திரிபால சிறிசேன நியமித்திருக்கிறார்.

இதன் ஊடாக, சிறிசேன ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு புதிய வடிவிலான அரசியல் நெருக்குதல்களை ஏற்படுத்தியிருக்கிறார் என்கின்றன தகவலறிந்த வட்டாரங்கள்.

மைத்திரியின் செயலர் உதய செனிவிரத்ன தலைமையிலான குழுவின் பரிந்துரைகளுக்குப் பின்னரே, அரச நிறுவனங்களின் தலைவர் பதவிகளுக்கான நியமனங்களை அறிவிக்குமாறு, அனைத்து அமைச்சுக்களின் செயலர்களுக்கும் மைத்திரி உத்தரவிட்டுள்ளார்.

இதுதொடர்பாக ஜனாதிபதி செயலகத்தில் இருந்து தமக்கு உத்தரவு வழங்கப்பட்டுள்ளது என்று, அமைச்சு ஒன்றின் செயலர் உறுதிப்படுத்தியுள்ள அவர், தமது அமைச்சரினால் நியமிக்கப்பட்ட அரச நிறுவனத் தலைவர்கள் தொடர்பான பட்டியலை ஜனாதிபதி செயலகத்துக்கு தாம் அனுப்பவுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் இச் செயற்பாடு அமைச்சர்கள் மத்தியில் நெருக்கடி நிலையினை ஏற்படுத்தியுள்ளது.

எனினும், அரச நிறுவனங்களுக்கான தலைவர்களை நியமிக்கும் அதிகாரம் தமக்குக் கீழ் வருகிறது என்றும், அதில் ஜனாதிபதியின் தலையீடு செய்ய மேற்கொள்ளும் நடவடிக்கைகளினால் தாம் அதிருப்தியடைந்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளனர்.

ஜனாதிபதி சிறிசேனா இது போன்ற குழுவொன்றை நியமித்ததன் மூலம், அமைச்சர்களின் அதிகாரங்களை மட்டுப்படுத்தி, தனது அதிகாரத்தை உறுதிப்படுத்த அவர் முயற்சிக்கிறார் என்றும் ஐக்கிய தேசியக் கட்சித் தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, மைத்திரியினால் நியமிக்கப்படும் இந்த குழுவினால், பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் அமைச்சரவையினால், மேற்கொள்ளப்படும் முக்கியமான அரசதுறை நியமனங்கள் விடயத்தில் மோதல் போக்கு உருவெடுக்கும் என்றும் நோக்குநர்கள் எச்சரித்துள்ளனர்.

இதேவேளை, தன்னுடைய அதிகாரங்களையும், தலைமைகளையும் சந்திரிக்காவிடம் இருந்து காப்பாற்றுவதற்காகவும் மைத்திரி ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கள் நுழைய தடை விதித்திருக்கிறார்.

இந்த ஆண்டில் பெரும் அரசியல் நெருக்கடிகள் ஏற்படுவதற்கான சந்தர்ப்பம் நிறையவே உண்டு என்கின்றன கொழும்புத் தகவல்கள்.

Latest Offers