மைத்திரி - சிறிபால டி சில்வாவுக்கு இடையிலான பனிப்போர் உக்கிரம்

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான நிமல் சிறிபால டி சில்வா மற்றும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையிலான பனிப்போர் அதிகரித்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை ஆலோசிக்காது, ஜனாதிபதி சிறிசேன எடுக்கும் தீர்மானங்கள் காரணமாக இந்த மோதல் உருவாகி இருப்பதாகவும் கட்சியின் கூட்டம் ஒன்றில் ஜனாதிபதி,கட்சியின் உள்விவகாரங்களை வெளியிடங்களில் பேசுவதாக நிமல் சிறிபால டி சில்வாவை சாடியிருந்ததாகவும் கூறப்படுகிறது.

முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க தலைமையில், வடக்கு மாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரே வீட்டில் சிறிசேனவுக்கு எதிரான சுதந்திரக்கட்சி அணியின் கூட்டம் நடந்துள்ளது. அண்மையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் நிமல் சிறிபால டி சில்வா கலந்துக்கொண்டதாக ஜனாதிபதிக்கு தகவல் கிடைத்துள்ளது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் ஏற்படுத்தப்படும் கூட்டணியால், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள், கட்சியினருக்கு ஏற்படும் நிலைமை சம்பந்தமாக, நிமல் சிறிபால டி சில்வா, ஜனாதிபதி சிறிசேனவிடம் தொடர்ந்தும் கேள்வி எழுப்பி வருவதாகவும் இதனால், அவர் மீது ஜனாதிபதி கடும் கோபத்தில் இருந்து வருவதாகவும் பேசப்படுகிறது.

எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிடும் நோக்கில், ஜனாதிபதி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை அழிக்க, பொதுஜன பெரமுனவுக்கு வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்துள்ளதாக சுதந்திரக்கட்சியின் பெரும்பான்மையினர் கருதுவதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் உட்கட்சி சந்திப்பில், ஜனாதிபதி, நேரடியாக நிமல் சிறிபால டி சில்வாவை சாடியமையானது இருவருக்கு இடையிலான பனிப்போரை அதிகரித்துள்ளது.

இவ்வாறான நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் 16 பேர் அணியை உட்பட ஒரு சிலரே சிறிசேனவுடன் இருப்பதாகவும் மூத்த தலைவர்கள் எவரும் ஜனாதிபதிக்கு ஆதரவாக இல்லை எனவும் அரசியல் தரப்புத் தகவல்கள் கூறுகின்றன.

Latest Offers