மைத்திரியின் நடத்தையில் ஏற்பட்ட சந்தேகம்!

Report Print Steephen Steephen in அரசியல்

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் பதவியில் இருந்து ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை நீக்கி விட்டு, கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவரை கட்சியின் தலைவராக நியமிப்பது குறித்து கட்சிக்குள் பேச்சுவார்த்தை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் நடத்தை தொடர்பில் அதிருப்தியடைந்துள்ள கட்சியின் அமைப்பாளர்களுடன் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் அமைப்பு பேச்சுவார்த்தைகளை நடத்தி வருகிறது.

முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவுடன் இணைய கட்சியின் தலைமை தீர்மானித்துள்ளமையே இதற்கு பிரதான காரணம் எனவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைமைத்துவத்தில் மாற்றம் ஏற்பட வேண்டும் எனவும் ஜனாதிபதி சிறிசேனவுக்கு பதிலாக கட்சியின் தலைமை பொறுப்பை ஏற்க தேவையான தலைவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் இருப்பதாகவும் சுதந்திரக்கட்சியை பாதுகாக்கும் அமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜீ.எச். புத்ததாச தெரிவித்துள்ளார்.

அரசாங்கத்தில் இணைந்தால், நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்துச் செய்யப் போவதாக கூறி, ஜனாதிபதி ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் 21 நாடாளுமன்ற உறுப்பினர்களை அச்சுறுத்தியுள்ளதாகவும் மகிந்த ராஜபக்ச உட்பட அவரது அணியினருக்கு வழங்கிய சுதந்திரத்தை இவர்களுக்கு வழங்கியிருந்தால், அனைவரும் அரசாங்கத்தில் இணைந்திருப்பர் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியில் கட்சியின் தலைமைத்துவம் தொடர்பாக அதிருப்தியடைந்துள்ள, கட்சியின் தொகுதி அமைப்பாளர்கள் ராஜினாமா செய்ய தயாராகி வருவதாக தெரியவருகிறது.

இந்த தொகுதி அமைப்பாளர்கள் படிப்படியாக தமது பதவிகளை ராஜினாமா செய்ய தயாராகி வருவதாகவும் தற்போது அவர்கள் குழுவாக கூடி கலந்துரையாடி வருவதாகவும் கூறப்படுகிறது. இந்த தொகுதி அமைப்பாளர்களே அண்மையில் நடைபெற்ற தொகுதி அமைப்பாளர்களின் சந்திப்பில், ஜனாதிபதி சிறிசேனவுக்கு எதிராக கருத்து வெளியிட்டதாக தெரிவிக்கப்படுகிறது.