தேசிய சர்வதேச பரீட்சைப் பெறுபேறுகளை ஒரே தடவையில் வெளியிட வேண்டாம்! பந்துல

Report Print Ajith Ajith in அரசியல்

கல்விப்பொதுத்தராதர உயர்தரப்பரீட்சையின் தேசிய மற்றும் சர்வதேச பாடத்திட்டங்களின் பெறுபேறுகளை ஒரே தரத்தில் வெளியிட்டமையை ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பு கண்டித்துள்ளது.

2018ஆம் ஆண்டு பரீட்சை பெறுபேறு வெளியீட்டின்போது இரண்டு பரீட்சைகளுக்கும் தோற்றிய மாணவர்களின் பெறுபேறுகள் ஒரே தடவையில் வெளியிடப்பட்டன.

இது சட்டவிரோதமான செயல் என்பதுடன், தேசிய மட்ட பாடசாலைகளுக்கு வரிச்செலுத்துவோரின் பணமே செலவிடப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்த்தன தெரிவித்துள்ளார்.

இந்த வருட பரீட்சை பெறுபேற்றின்படி கலைத்துறையில் தேசிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவன், சர்வதேச பாடசாலையை சேர்ந்தவராவார்.

பரீட்சைப்பெறுபேறுகளை வெளியிடும்போது அரசாங்க மற்றும் அரசாங்க அனுமதிப்பெற்ற தனியார் பாடசாலைகளின் பெறுபேறுகளை ஒரே தடவையில் வெளியிடலாம்.

இதனைவிடுத்து சர்வதேச பாடசாலைகளின் பெறுபேறுகளையும் ஒன்றாக வெளியிடும்போது அது மாணவர் மத்தியில் பிரச்சினைகளை தோற்றுவிக்கும்.

இதன்போது சர்வதேச பாடசாலைகளின் மாணவர்கள் சிறந்த பெறுபேற்றை பெறும்போது பெற்றோருக்கு தமது பிள்ளைகளை சர்வதேச பாடசாலைகளுக்கு அனுப்பவேண்டும் என்று எண்ணத்தை தோற்றுவிக்கக்கூடும்.

எனவே இந்த நடவடிக்கையை அரசாங்கம் கைவிடவேண்டும் என்று பந்துல குணவர்த்தன கோரியுள்ளார்.