மைத்திரியின் சகோதரன் மற்றும் மகளின் திடீர் முடிவால் தடுமாறும் மகிந்த

Report Print Steephen Steephen in அரசியல்

ஜனாதிபதியின் மூத்த புதல்வி சத்துரிக்கா சிறிசேன உட்பட ஜனாதிபதியின் உறவினர்கள் சிலர் நேரடியாக அரசியலில் பிரவேசிக்க தயாராகி வருவதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி சிறிசேனவின் சகோதரரான கோடிஸ்வர வர்த்தகர் டட்லி சிறிசேனவும் இதில் அடங்குவதாக கூறப்படுகிறது. ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சிக்குள் ஜனாதிபதி சிறிசேன, தனிமைப்படுத்தப்படுவதை தவிர்க்கவும் கட்சிக்குள் அதிகாரத்தை வலுப்படுத்தும் நோக்கிலும் இவர்களின் அரசியலில் பிரவேசிக்க உள்ளதாக பேசப்படுகிறது.

சத்துரிக்கா சிறிசேன ஏற்கனவே தனக்கான ஊடகப் பிரிவு ஒன்றை ஏற்படுத்திக்கொண்டுள்ளதுடன் முகநூல் உட்பட சமூக வலைத்தளங்களை பயன்படுத்தி அரசியல் பிரவேசத்திற்கான சூழலை ஏற்படுத்தி வருகிறார். அத்துடன் டட்லி சிறிசேனவும் வெளிப்படையாக அரசியல் கருத்துக்களை வெளியிட ஆரம்பித்துள்ளார்.

கொழும்பில் நேற்று நடைபெற்ற வைபவம் ஒன்றில் உரையாற்றிய டட்லி சிறிசேன, அரசியல்வாதிகளின் பண பேராசை காரணமாக நாட்டை காட்டிக்கொடுக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகவும் அதற்கு எதிரான போராட்டத்திற்கு தலைமை தாங்க தான் தயாராக இருப்பதாகவும் கூறியிருந்தார்.

மேலும் தான் அறிந்த அரசியலுக்கு அமைய நாட்டை 9 துண்டுகளாகவும் 9 பிராந்தியங்களாகவும் பிரிக்கும் திட்டம் முன்னெடுக்கப்படலாம் எனவும் அதற்கு எதிரான போராட்டத்திற்கும், நாட்டு பிள்ளைகளின் எதிர்காலத்திற்காகவும் உயிர் அர்ப்பணியுடன் தலைமை தாங்க தயாராக இருப்பதாகவும் தனது இந்த கருத்து பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்றாலும் தான் எந்த பிரச்சினைக்கும் பயந்த மனிதன் கிடையாது எனவும் டட்லி சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.

நாட்டு அரசியல் மற்றும் எதிர்வரும் தேர்தல் தொடர்பில் பல்வேறு சர்ச்சை செய்திகள் வெளிவரும் நிலையில் டட்லி சிறிசேனவின் இந்த கருத்து விரைவில் தேர்தல் நடத்தப்படுவதற்கான அறிகுறியாக கருதலாம் என அரசியல் ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், இவ்வாறான நடவடிக்கை ஒன்று மேற்கொள்ளப்படுமாக இருந்தால் சுதந்திரக்கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன ஆகிய கட்சிகளில் பிளவு ஏற்படும் என எதிர்வு கூறப்பட்டுள்ளதுடன், இது மகிந்த ராஜபக்சவின் அரசியலை பின்னடையச் செய்யும் எனவும் குறிப்பிடப்படுகின்றது.