புதிய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்படவில்லை

Report Print Steephen Steephen in அரசியல்

புதிய அரசியலமைப்புச் சட்டம் இன்னும் உருவாக்கப்படவில்லை எனவும் அதனை உருவாக்கும் பணிகளே தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

மக்கள் விடுதலை முன்னணியின் தலைமையகத்தில் இன்று நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில் அனுரகுமார திஸாநாயக்க இதனை கூறியுள்ளார்.

பொதுத் தேர்தலை பெற்றுக்கொள்வதற்கான நடவடிக்கைகளை மக்கள் விடுதலை முன்னணி எடுக்கும். இதற்கு அமைய மாகாண சபைத் தேர்தல், பொதுத் தேர்தல், நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறை ஒழிக்கப்படாவிட்டால், ஜனாதிபதித் தேர்தல் ஆகிய மூன்று தேர்தல்களும் இந்த ஆண்டு நடைபெறும்.

தேர்தல் நடத்தப்பட உள்ளதால், இனவாதத்தை தூண்டி வருகின்றனர். கடும் இனவாத மோதலை உருவாக்க முயற்சித்து வருகின்றனர். தெற்கில் இனவாத முகாமாக மகிந்த ராஜபக்ச அணி செயற்பட்டு வருகிறது.

புதிய அரசியலமைப்புச் சட்டம் தேவை என்ற நிலைப்பாட்டில் நாங்கள் இருந்து வருகிறோம். நாங்கள் அதனை ஒழித்து மறைத்து கூறவில்லை. 78 ஆம் ஆண்டு அரசியலமைப்புச் சட்டம் முற்றாக நீக்கப்பட்டு, புதிய அரசியலமைப்புச் சட்டம் கொண்டு வரப்பட வேண்டும்.

ரணில் விக்ரமசிங்கவுக்கோ, சுமந்திரனுக்கோ, மகிந்த ராஜபக்சவுக்கோ எங்களுக்கோ புதிய அரசியலமைப்புச் சட்டத்தை கொண்டு வர முடியாது. நாடாளுமன்றத்தில் நடப்பது புதிய அரசியலமைப்புச் சட்டத்தை திருத்தும் பணியல்ல.

புதிய அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்கும் செயற்பாடுகள் இரண்டு பிரிவுகளை கொண்டது. ஒன்று அரசியலமைப்புச் சட்டத்தை உருவாக்குவது, இரண்டாவது அரசியலமைப்புச் சட்டத்தை நிறைவேற்றுவது.

தற்போது அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டு வருகிறது என அனுரகுமார திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.