பர்மாவிலுள்ள 969 என்ற அமைப்பின் பிரதானியான அஷ்வின் விராது தேரர் பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரருக்கு விசேட கடிதமொன்றை அனுப்பியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
தேசிய போராட்டத்துக்காக ஞானசார தேரரின் தியாகத்தை நினைத்து தான் பெருமைப்படுவதாக அஷ்வின் விராது தேரர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
நான் இக்கடிதத்தில் எமது நண்பருக்கு ஒரு செய்தியை அனுப்ப விரும்புகின்றேன். நீங்கள் உங்களது வாழ்வையும், சுதந்திரத்தையும் இனத்தின் போராட்டத்துக்காக ஆபத்தில் போட்டுக் கொண்டுள்ளதையிட்டு நிச்சயம் பெருமைப்படுகின்றேன்.
நாம் எமது வாழ்வை ஆபத்தில் போட்டுள்ளோம். இனத்துக்காக தமது வாழ்வை தியாகம் செய்தவர்கள் நிச்சயம் மக்களினால் அன்பு காட்டப்படுவார்கள். அதேபோன்று வீரர் என்று போற்றுவார்கள். இதனால், நீங்கள் சிறையில் போடப்பட்டுள்ளதையிட்டு கவலைப்பட வேண்டாம்.
நீங்கள் பெருமைப்படுங்கள். சந்தோஷப்படுங்கள். சத்தியத்துக்காக முன்னிற்பவர்கள் குற்றவாளியாக காணப்பட்டாலும், இறுதியில் வெற்றி உங்களை வந்தடையும். நீங்கள் நிச்சயம் உங்களது போராட்டத்தில் வெற்றி பெறுவீர்.
நீங்கள் தான் இலங்கையின் வீரர். மியன்மாரும் உங்களை வரவேற்கின்றது. உங்களது சுகத்தைப் பற்றி கவனம் செலுத்துங்கள். நாம் அனைவரும் உங்களது சுதந்திரத்தை எதிர்பார்த்துள்ளோம் என அந்த கடிதத்தில் பர்மா தேரர் குறிப்பிட்டுள்ளார்.