இலஞ்ச ஆணைக்குழுவுக்கு சென்ற ரங்கே பண்டார

Report Print Steephen Steephen in அரசியல்

நாடாளுமன்றத்தில் பெரும்பான்மை நிரூபிப்பதற்காக அணி தாவும் நபர்களுக்கு பணம் மற்றும் அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர் பதவிகளை இலஞ்சமாக வழங்கியதாக கூறப்படும் சம்பவம் தொடர்பான நடத்தப்படும் விசாரணைகளுக்காக சாட்சியமளிக்க நாடாளுமன்ற உறுப்பினர் பாலித ரங்கே பண்டார, இன்று இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவில் ஆஜராகியிருந்தார்.

ட்ரான்ஸ்பேரன்சி இண்டர்நேஷனல் நிறுவனம் இந்த சம்பவம் தொடர்பாக முறைப்பாடு செய்திருந்ததுடன் அது குறித்து ஆணைக்குழு விசாரணைகளை நடத்தி வருகிறது.

விஞ்ஞான தொழில்நுட்பம் மற்றும் ஆராய்ச்சி அமைச்சர் சுஜீவ சேனசிங்க, நாடாளுமன்ற உறுப்பினர்களான ஆசு மாரசிங்க, முஜிபுர் ரஹ்மான், சமிந்த விஜேசிறி, ஹேசா விதானகே ஆகியோரும் ரங்கே பண்டாரவுடன் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழுவிற்கு வந்திருந்தனர்.

மகிந்த ராஜபக்ச தலைமையிலான அரசாங்கத்திற்கு ஆதரவளிக்க வருமாறு முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திஸாநாயக்க, ரங்கே பண்டாரவுக்கு அழைப்பு விடுக்கும் தொலைபேசி உரையாடலை, ரங்கே பண்டார ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார்.

மகிந்த அரசாங்கத்தில் இணைந்தால், 50 கோடி ரூபாய் பணம் அல்லது அமைச்சரவை அந்தஸ்துள்ளமை அமைச்சர் பதவி வழங்கப்படும் என பேரம் பேசப்பட்ட ஒலி தகடுகளையும் அவர் ஊடகங்களுக்கு வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.