அரசியல் குழப்பங்களுக்குப் பின்னர் வருகிறது புதிய வரவு செலவுத்திட்டம்

Report Print Steephen Steephen in அரசியல்

2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத்திட்டத்தை எதிர்வரும் பெப்ரவரி மாதம் 5 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்ய அமைச்சரவை தீர்மானித்துள்ளது.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் இன்று ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரத்தை நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீர அமைச்சரவைக்கு தாக்கல் செய்திருந்தார்.

இதற்கு அமைய வரவு செலவுத்திட்டத்தின் ஒதுக்கீட்டு சட்டமூலம் எதிர்வரும் திங்கட் கிழமை அமைச்சரவையில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

நல்லாட்சி அரசாங்கம் கடந்த நவம்பர் மாதம் 5 ஆம் திகதி 2019 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்யவிருந்தது.

இதற்கு முன்னர் ஒக்டோபர் 26 ஆம் திகதி ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, மகிந்த ராஜபக்சவை பிரதமராக நியமித்து மேற்கொண்ட அரசியல் சூழ்ச்சி காரணமாக வரவு செலவுத் திட்டத்தை தாக்கல் செய்ய முடியாமல் போனது.

மகிந்த ராஜபக்ச பிரதமர் பதவியை ராஜினாமா செய்த பின்னர், ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் பிரதமராக ரணில் விக்ரமசிங்க மீண்டும் பதவியேற்றதுடன் அதன் பின்னர் நியமிக்கப்பட்ட அமைச்சரவை நான்கு மாதங்களுக்கான அரச செலவுகளுக்காக இடைக்கால கணக்கு அறிக்கை ஒன்றை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்து நிறைவேற்றியது.

எதிர்வரும் பெப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்படும் வரவு செலவுத் திட்டத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்கும் பல யோசனைகள் முன்வைக்கப்பட உள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.