சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களுக்கும் சிறீதரனிற்கும் இடையிலான கலந்துரையாடல்

Report Print Yathu in அரசியல்

கிளிநொச்சி - முல்லைத்தீவு சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்களிற்கும், நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனிற்கும் இடையிலான கலந்துரையாடல் ஒன்று இடம்பெற்றுள்ளது.

கிளிநொச்சி கந்தசுவாமி கோவிலடியில் அமைந்துள்ள தமிழரசு கட்சி அலுவலகத்தில் குறித்த சந்திப்பு இன்று பிற்பகல் 2 மணியளவில் இடம்பெற்றது.

இதில் சிவில் பாதுகாப்பு திணைக்கள உத்தியோகத்தர்கள், வ.மா சபை முன்னாள் உறுப்பினர்களான குருகுலராஜா, பசுபதிப்பிள்ளை உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

குறித்த சந்திப்பில் முன்பள்ளிகளை படையினர் நடத்த கூடாது என்ற விடயத்தை தமிழ் தேசிய கூட்டமைப்பினர் ஜனாதிபதியுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் தெரிவித்தமையால் சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் கீழ் உள்ள அனைத்து முன்பள்ளிகளையும் விட்டு எதிர்வரும் மார்ச் மாதத்திற்கிடையில் வெளியேற வேண்டும்.

குறித்த விடயம் காரணமாக இங்கு சிவில் பாதுகாப்பு திணைக்களத்தின் ஊடாக பணியாற்றும் ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது.

இவ்விடயம் தொடர்பில் வடமாகாண ஆளுனராக இருந்த குரே அவர்கள் இதற்கு காரணம் கூட்டமைப்பினர் என தெரிவித்த விடயம் உண்மையா என சிவில் பாதுகாப்பு திணைக்களம் சார்பில் சிறீதரனிடம் வினவப்பட்டது.

இதற்கு பதில் அளித்த சிறிதரன்,

அந்த கலந்துரையாடலில் சிவில் இராணுவத்தினரால் முன்பள்ளிகள் நடத்த கூடாது என தெரிவிக்கப்பட்ட விடயம் உண்மை எனவும், அவர்களை சிவில் பாதுகாப்பு திணைக்கள ஆசிரியர்களாக இல்லாது, அவர்களை முன்பள்ளி ஆசிரியர்களாக அதே சம்பளத்துடன் கல்வி அமைச்சின் கீழோ அல்லது மத்திய அரசின் கீழ் உள்வாங்க வேண்டும் என தாம் கோரியதாக அவர் தெரிவித்திருந்தார்.

இதேவேளை ஆசிரியர்கள் இராணுவ பயிற்சி பெறுவதால், முன்பள்ளி சிறார்கள் படையணி சீருடைகளை அணிதல், முன்பள்ளிகளில் படையணி கொடிகள் ஏற்றப்படுதல் போன்ற விடயங்கள் தொடர்பிலும் பல தடவை சுட்டிக்காட்டியதாகவும் தெரிவித்திருந்தார்.

இந்த நிலையில் இருந்து அவர்களையும், எமது சிறார்களையும் பாதுகாக்கவே இவ்வாறு தான் அங்கு பேசியதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

இதன் போது கருத்து தெரிவித்த சி.பா உத்தியோகத்தர்,

நீங்கள் குறிப்பிட்ட விடயம் அனைத்தும் நல்ல விடயம். ஆனால் இவற்றை காலம் கடந்து குறிப்பிட்டுள்ளீர்கள். 2 வருடமாக எமது முன்பள்ளி ஆசிரியர்களிற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றது.

இந்த நேரம் இவ்வாறு அரசாங்கத்திற்கு நீங்கள் கூறியிருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும். இப்போது நீங்கள் கூறிய விடயங்கள் நிறைவேறும் என்பதில் எமக்கு நம்பிக்கை இல்லை என அவர்கள் தெரிவித்தனர்.

இச்சந்திப்பின்போது, கடந்த காலங்களில் முன்னாள் போராளிகளுக்கு பணி புரியும் இடங்களில் கிடைக்கும் சம்பளத்தை விட பத்தாயிரம் ரூபா அரசு வழங்கும் என தெரிவிக்கப்பட்டது.

ஆனால் அது இன்றுவரை அவர்களை சென்றடையவில்லை. அவ்வாறு இதுவரை பயன்பெறவில்லை எனவும் சிறீதரன் குறிப்பிட்டிருந்தார்.

குறித்த கலந்துரையாடலின் பின்னர் சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர் ஊடகங்களிற்கு கருத்து தெரிவித்தார்,

இந்த சந்திப்பின்போது பல விடயங்கள் தொடர்பில் நாம் கலந்துரையாடினோம். எனினும் அவர் குறிப்பிட்ட விடயங்கள் நிறைவேற்றப்படும் என்ற நம்பிக்கை எமக்கு இல்லை என அவர் தெரிவித்திருந்தார்.

சிவில் பாதுகாப்பு திணைக்களத்தால் நடத்தப்படும் முன்பள்ளி ஆசிரியர்களிற்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றமை தொடர்பில் அவரிடம் வினவியபோது,

அவர்களுக்கு பயிற்சிகள் வழங்கப்படுகின்றது. அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சி இராணுவ பயிற்சி அல்ல. தலமைத்துவ பயிற்சியே அது.

அங்கு தலமைத்துவம் தொடர்பில் பல்வேறு விடயங்களே கற்றுக்கொடுக்கப்படுகின்றது. இவ்வாறு பயிற்சி பெற்றும் அவர்கள் போதிய ஊதியத்துடன் முன்பள்ளி ஆசிரியர்களாக சேவையாற்றுகின்றார்கள் என்பது தொடர்பில் மகிழ்ச்சியடைய வேண்டும் என அவர் தெரிவித்திருந்தார்.

குறித்த சந்திப்பு தொடர்பில் சிறீதரன் ஊடகங்களிற்கு கருத்து தெரிவிக்கையில்,

முன்பள்ளிகளை இராணுவம் நடத்தக்கூடாது என்பது தொடர்பில் பல தடவை நாம் வலியுறுத்தி வந்ததாகவும், அவ்வாறு ஆசிரியர்களாக உள்ளவர்களை மாகாண சபை அல்லது மத்திய அரசின் கீழ் உள்வாங்கப்பட வேண்டும் என தாம் வலியுறுத்தி வருவதாகவும் தெரிவித்தார்.

வடமாகாண சபையில் இவ்விடயம் தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட்டமை, நாடாளுமன்றில் விவாதித்தமை தொடர்பிலும் அவரிடம் வினவியபோது,

அவ்வாறான தீர்மானம் வடமாகாணசபையில் நிறைவேற்றப்பட்டதுடன் நியதி சட்டமும் உருவாக்கப்பட்டது, தற்போது மாகாணசபை முடிவடைந்துள்ளது எனவும் குறிப்பிட்டார்.

கலந்துரையாடலில் முன்னாள் போராளிகளுக்கு அரசினால் பத்தாயிரம் வழங்கப்படும் என தெரிவித்த அரசு அதை வழங்கவில்லை என குறிப்பிட்டிருந்தீர்கள்.

அந்த அரசாங்கதிற்கும், அதை தொடர்ந்து வந்த அரசாங்கதிற்கும் நிபந்தனை இல்லாத ஆதரவை வழக்கினீர்கள் என வினவியபோது,

வரவு செலவு திட்டத்திற்கு ஆதரவு வழங்கியது பத்தாயிரம் சம்பளத்திற்கு அல்ல. அரசியல் தீர்வு உள்ளிட்ட பல விடயங்களை கவனத்தில் கொண்டே ஆதரவு வழங்கப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

இம்முறையும் அரசாங்கத்திற்கு ஆதரவு வழங்குவீர்களா என வினவியபோது,

கட்டாயம் வழங்குவோம். நாம் கொண்டு வந்த அரசாங்கம். ஆதரவு வழங்கத்தானே வேண்டும் எனவும் அவர் இதன் போது தெரிவித்திருந்தார்.

Latest Offers