புலிகளுக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்புக்குமிடையிலான டீலிங்! உண்மைகளை வெளிப்படுத்திய உறுப்பினர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழீழ விடுதலைப் புலிகள் பல தலைவர்களை செயற்பட விடாமல் மிரட்டினார்கள், அதட்டினார்கள் என்பது எல்லாம் மிக மிகத் தவறான கருத்தியலாகும் என்று முன்னாள் வட மாகாண சபை உறுப்பினர் எம்.கே. சிவாஜிலிங்கம் தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பின் உருவாக்கத்தில் புலிகளுக்கும், கூட்டமைப்பின் தலைவர்களுக்கும் இடையிலான டீலிங்கின் அடிப்படையில் நடைபெற்றது என்று வட மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் சயந்தன் தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக கருத்து வெளியிட்டுள்ள சிவாஜிலிங்கம்,

தமிழீழ விடுதலைப் புலிகள் பல தலைவர்களை செயற்பட விடாமல் மிரட்டினார்கள், அதட்டினார்கள் என்பது எல்லாம் மிக மிகத் தவறான கருத்தியலாகும்.

உண்மையில் அவர்கள் அனைத்து தலைவர்களையும் இணைத்து, ஒரு சுமூகமான ஜனநாயக அரசியலை முன்னெடுப்பதை விரும்பினார்கள். அதற்கான முயற்சிகளை முன்னெடுத்தார்கள்.

அனைத்து தலைவர்களும் வன்னிக்கு அழைக்கப்பட்டு ஆலோசனைகளும் இடம்பெற்றன. புலிகளுக்கோ தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கோ டீலிங் என்ற ஒன்று தேவைப்பட்டிருக்கவில்லை.

விடுதலைப்புலிகள் ஆயுத ரீதியில் செயற்பட்டாலும் ஜனநாயக ரீதியாக தமிழ் தேசிய கூட்டமைப்பானது அரசியல் ரீதியில் செயற்படுவதை அவர்கள் விரும்பினார்கள்.

இதேவேளை, ஆனந்தசங்கரியுடன் பேச்சுவார்த்தை நடத்தி அவரை தேசியப் பட்டியலின் மூலம் நாடாளுமன்ற உறுப்பினராக நியமிப்பதன் மூலமாக சில உள்ளகப் பிரச்சினைகளை கட்டுப்படுத்த முடியும் என்பதை இளம்பரிதி மூலமாக தகவல் அனுப்பிப்பட்டதாகவும் சிவாஜிலிங்கம் குறிப்பிட்டிருக்கிறார்.

இன்னொருபுறத்தில் 2005ம் ஆண்டு தேர்தலின் போது யாருக்கு ஆதரவளிப்பது என்பது தொடர்பான கூட்டமும் இடம்பெற்றது. இதன் போது பலவிதமான கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்பட்டன.

குறிப்பாக அன்றைய தேர்தலைப் புறக்கணிப்பு தொடர்பில் புலிகள் கருத்துக்களை முன்வைத்தார்கள். அதற்குக் காரணமும் இருந்தது. விடுதலைப் புலிகளிடமிருந்து கருணாவை நாங்கள் தான் பிரித்தோம் என்று ஐக்கிய தேசியக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வெளிப்படையாகவே தெற்கில் பிரச்சாரங்களை மேற்கொண்டனர்.

இது தமிழீழ விடுதலைப் புலிகளை கடுமையாகச் சீற்றம் கொள்ளச் செய்தது. எனினும், நானும், அமரர் நடராஜா ரவிராஜ் இணைந்து இடைக்கால போர் நிறுத்தத்தைக் கொண்டுவந்த ரணிலுக்கு மீண்டும் ஒரு வாய்ப்பினைக் கொடுத்துப் பார்க்க முடியும் என்று கேட்டுக் கொண்டோம்.

இதற்கு அன்றைய அரசியல்துறைப் பொறுப்பாளராக இருந்த சு.ப. தமிழ்செல்வன் ஒரு கருத்தியலை முன்வைத்தார். அதாவது, இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை தொடர்பில் எழுத்து மூலமான ஒரு வாக்குறுதியை நோர்வை மூலமாக மிக இரகசியமாக வழங்குமாறு கேட்டுக் கொண்டார்கள்.

ஆனால், அதை அன்றைய காலகட்டத்தில் ரணில் தரப்பினரிடம் இருந்து சாதமாகப் பெற்றுக் கொள்ளமுடியவில்லை. இந்தக் தகவலோடு நான் ரணில் விக்ரமசிங்கவின் அலுவலகத்திற்குச் சென்றேன். எனினும் சாதகமான பதில் அப்போதும் வரவில்லை. இது தொடர்பான கருத்துக்களை பின்னர் ஊடகங்கள் வாயிலாக இரண்டு முறை முன்வைத்த போதும், அதற்கான மறுப்பினை இன்று வரை அவர் முன்வைக்கவில்லை.

இன்னொருபுறத்தில், புலிகள் மகிந்த ராஜபக்சவிடம் பணத்தினைப் பெற்றுக் கொண்டார்கள், அதனால் தான் தேர்தலைப் புறக்கணிக்கச் சொன்னார்கள் என்று சொல்லப்படும் தகவல்களில் எந்தவிதமான உண்மையும் இல்லை.

மகிந்த ராஜபக்சவிடம் இருந்து புலிகளுக்கு 20 கோடி ரூபாய் பணம் கொடுக்கப்பட்டதாக சொல்லப்படும் கருத்துக்கள் எல்லாம் அடிப்படையில் பொய்யானவை. 20 கோடி என்பது புலிகளுக்கு மிகமிக சாதாரணமானது.

இந்த 20 கோடிகள் அவர்களுக்கு 1990 களிலேயே கிடைத்திருந்தாலும் சாதாரணமானதாக தான் இருந்திருக்கும். 2005ம் ஆண்டு புலிகளிடம் அதிகளவான பணங்கள் இருந்தன. எனவே மகிந்தவிடம் இருந்து பெற்றுக்கொண்டார்கள் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது.

அன்று புலிகள் அரசியல் ரீதியில் ஒரு உடன்படிக்கைக்கு வர முனைந்தார்கள். அதற்கு அவர்கள் தயாராகவே இருந்தார்கள். இதனால் தான் ரணிலிடம் நோர்வை மூலமாக எழுத்து மூலமான வாக்குறுதிகளை புலிகள் கேட்டார்கள்.

இடைக்காலத் தன்னாட்சி அதிகார சபை தொடர்பாக பேச வரச் சொன்னார்கள், முழுமையாக அவர்கள் அதைக் கேட்கவில்லை. கடுமையான நிபந்தனைகளை விடுதலைப்புலிகள் விதிக்கவில்ல. அவர்கள் முதலில் வாக்குறுதியையே கேட்டார்கள். ஆனால் அதை கொடுக்கவில்லை.

இந்நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பு ஒரணியாகச் செயற்படுவதை புலிகள் விரும்பினார்கள். புலிகள் தவறாக நடந்தார், மோசமான செயற்பட்டார்கள், என்பது தவறான விடையம்.

புலிகளுக்கும், தமிழ் தேசிய கூட்டமைப்பினருக்கும் இடையில் டீல் இருக்கிறது என்பது தொடர்பாக பேசுவது மிக மிக தவறான விடையம் என்றார்.