ஆபத்தான எந்த வாக்குறுதியையும் கூட்டமைப்பிடம் கொடுக்கவில்லை!

Report Print Murali Murali in அரசியல்

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவைப் பெறுவதற்காக, நாட்டுக்கு ஆபத்தை ஏற்படுத்தக் கூடிய எந்த வாக்குறுதியையும் கொடுக்கவில்லை என அமைச்சர் அர்ஜூன ரணதுங்க தெரிவித்துள்ளார்.

அத்துடன், பிரிவினைவாதம் அல்லது இனவாதங்களை தூண்டிவிடும் செயல்களில் அரசாங்கம் ஈடுபட்டால், அரசாங்கத்துடன் இணைந்து செயற்படமாட்டேன் எனவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விடயம் தொடர்பில் தொடர்ந்தும் கருத்து தெரிவித்துள்ள அவர், “தனிநாட்டை உருவாக்கிக் கொடுப்பதாக கூட்டமைப்புக்கு அரசாங்கம் வாக்குறுதி கொடுத்திருப்பதாக, பரப்பப்படும் வதந்திகளில் உண்மையில்லை.

இந்நிலையில், நாட்டைப் பிளவுபடுத்த, கூட்டமைப்புக்கு அரசாங்கம் அனுமதி அளித்திருப்பதாக குறிப்பிட்ட சிலர் அடிப்படையற்ற குற்றச்சாட்டுகளை கூறி வருகின்றனர்.

வடக்கு மக்களின் பல்வேறு பிரச்சினைகளை தீர்ப்பதற்கு அரசாங்கத்தின் ஆதரவை கூட்டமைப்பு எதிர்பார்க்கிறது. எனினும், நாட்டைப் பிளவுபடுத்தும் எந்தக் கோரிக்கையையும், கூட்டமைப்பு ஒருபோதும் முன்வைக்கவில்லை.” என அவர் மேலும் கூறினார்.

இதேவேளை, அரசியல் நெருக்கடி ஏற்பட்டிருந்த காலப்பகுதியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுக்கொள்ள ஐக்கிய தேசியக் கட்சி கூட்டமைப்புடன் உடனபடிக்கை செய்திருந்ததாக செய்திகள் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.