தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்பது வடக்கு கிழக்கு பகுதிகளில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் பேசும் ஒரு கட்சி என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருனிகா பிரேமசந்திர தெரிவித்துள்ளார்.
சமகால அரசியல் நிலவரங்கள் குறித்து கொழும்பு ஊடகம் ஒன்றில் கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார். இதன் போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
“தமிழ் தேசியக் கூட்டமைப்பு எந்த விதத்திலும் எங்களுக்கு அழுத்தங்களை பிரயோகிக்கவில்லை. இதனை மிகவும் பொறுப்புடன் கூறிக்கொள்ள விரும்புகின்றேன்.
பிரதமரை சந்தித்து நாட்டை பிளவுப்படுத்தும் வகையிலான எந்த கோரிக்கையினையும் இரா.சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பினர் முன்வைக்கவில்லை.
2009ஆம் ஆண்டு முதல் சிறையில் தமிழ் அரசியல் கைதிகள் இருக்கின்றனர். அவர்கள் விரைவில் விடுதலை செய்யப்பட வேண்டும். அவர்கள் குற்றம் செய்திருப்பின் அவர்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்ய வேண்டும்.
இல்லாவிட்டால் அவர்களை விடுதலை செய்ய வேண்டும் என்ற மனித நேயத்துடனான விடயங்களையே கூட்டமைப்பின் கோரிக்கையாக முன்வைத்துள்ளனர்.” என அவர் மேலும் கூறியுள்ளார்.