சுமந்திரன் அன்று சொன்னபோது நிலைமை வேறு! அரசியல் அறிவு பூச்சியமாகிவிடும் என்கிறார் சித்தார்தன்

Report Print Murali Murali in அரசியல்

இன்று இருக்கும் அரசியல் சூழ்நிலையில் புதிய அரசியல் அமைப்பு வரும் என்று சொல்வேனாக இருந்தால் என்னுடைய அரசியல் அறிவு பூச்சியமாகிவிடும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் த.சித்தார்தன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

“ஒருமித்த நாடு தொடர்பில் எம்.ஏ.சுமந்திரன் தொடர்ந்தும் வெளியிட்டு வரும் கருத்து தொடர்பில் இதன் போது கேள்வியெழுப்பப்பட்டது. இதற்கு பதிலளித்து பேசிய அவர்,

“சுமந்திரன் அன்று சொன்ன நிலைமைக்கும், இன்று இருக்கும் நிலைமைக்கும் ஒரு சிறிய வித்தியாசம் இருக்கின்றது.

இன்றைய நிலையில், ஐக்கிய தேசியக் கட்சியை சேர்ந்த பலரும் ஒற்றையாட்சி என்ற சொல் மூன்று மொழிகளிலும் வரவேண்டும் என்ற தொணியிலே பேச ஆரம்பித்துவிட்டனர்.

இப்படியான நிலையில் தமிழ் மக்களுக்கு ஏற்புடைய அரசியல் அமைப்பு ஒன்று வரும் என்பது சந்தேகமே. கூட்டமைப்பு, கூட்டமைப்பாக கூடி, ஆராய்ந்து இதற்கான இணக்கத்தை இது வரையிலும் கொடுக்கவில்லை.

ஏக்கிய ராஜ்ய என்பதற்கு அரசியல் அமைப்பில் எதை சொல்லப்போகின்றார்கள் என்பது மிக முக்கியமான விடயம். என்ன விளக்கம் கொடுக்கப்போகின்றார்கள் என்பதும் முக்கியமான விடயம்.

இவையெல்லாம் சொல்லப்பட்டு, இன்று இருக்கும் நிலையில், புதிய அரசியல் அமைப்பு ஒன்றும் வரும் என நான் சொல்வேனாக இருந்தால் என்னுடைய அரசியல் அறிவு பூச்சியமாகிவிடும்” என அவர் மேலும் கூறியுள்ளார்.