அவ்வாறு நடக்காவிடின் தீர்மானம் ஒன்றை மேற்கொள்வேன்! தமிழர் தலைநகரில் ஐ.தே.க எம்.பி

Report Print Gokulan Gokulan in அரசியல்

அமைச்சுப் பதவியல்ல, அமைச்சர்களின் ஒத்துழைப்பே தனது எதிர்பார்ப்பு என நாடாளுமன்ற உறுப்பினர் இம்ரான் மஹ்ருப் தெரிவித்துள்ளார்.

தமிழர் தலைநகரான திருகோணமலையில் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் முக்கியஸ்தர்களுடன் இடம்பெற்ற கலந்துரையாடலில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

மக்களுக்கு சேவை செய்யவே எங்களை மக்கள் நாடாளுமன்றத்திற்கு அனுப்பியுள்ளனர். ஆனால் கடந்த 3 வருடங்களாக காணப்பட்ட தேசிய அரசின் மூலம் எங்களை போன்ற பின்வரிசை நாடாளுமன்ற உறுப்பினர்களால் எமது மக்களுக்கு நாம் நினைத்ததை போல் சேவை செய்ய முடியவில்லை.

தற்போது ஐக்கிய தேசிய முன்னணியின் தனி அரசாங்கம் ஏற்படுத்தப்பட்ட பின் ஆதரவாளர்களிடம் பாரிய எதிர்பார்ப்பு தோன்றியுள்ளது. அவர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யாமல் எம்மால் அடுத்த தேர்தலுக்கு அவர்கள் முன்செல்ல முடியாது.

இவ்வாறு கூறியதும் நீங்களும் அமைச்சுப் பதவியை எதிர்பார்கிறீர்களா என ஊடகங்கள் என்னிடம் வினவுகின்றனர். 19ஆவது திருத்த சட்டத்தின்படி அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர்களின் எண்ணிக்கை மட்டுபடுத்தப்பட்டுள்ளன.

ஆகவே நானும் அமைச்சு பதவி கேட்டு தலைமையை சிரமத்துக்கு உள்ளாக்க விரும்பவில்லை. ஆனால் முன்னைய காலத்தை போல் அல்லாமல் இப்போது அமைச்சர்களின் பூரண ஒத்துழைப்பையே நான் பிரதமரிடமும் அமைச்சர்களிடமும் கோரியுள்ளேன்.

இவர்களின் பூரண ஒத்துழைப்பு எனக்கு கிடைப்பின் பிரதி அமைச்சர்களை விட சிறப்பாக என்னால் செயல்பட முடியும்.

ஆகவே இனி வரும் காலங்களில் எமது கட்சி ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பை படிப்படியாக நிவர்த்தி செய்ய எண்ணியுள்ளேன்.

அவ்வாறு அமைச்சர்களின் ஒத்துழைப்பு கிடைக்காமல் எமது ஆதரவாளர்களின் எதிர்பார்ப்பு நிறைவேறாமல் போனால் நானும் அரசியல்ரீதியாக தீர்மானம் ஒன்றை மேற்கொள்ள வேண்டி வரும்.

ஆனால் அந்த தீர்மானம் கட்சி மாறும் தீர்மானமாக இருக்காது என்பதை மட்டும் கூறிக்கொள்ள விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.

Latest Offers