வரவு செலவு திட்டத்திற்கு முன் அரசியல் தீர்மானத்தை எடுக்க போகும் சுதந்திரக் கட்சியின் 17 எம்.பிக்கள்

Report Print Steephen Steephen in அரசியல்

அரசாங்கம் எதிர்வரும் பெப்ரவரி 5ஆம் திகதி வரவு செலவு திட்டத்தை தாக்கல் செய்யும் முன் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இருக்கும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமது அரசியல் எதிர்காலம் தொடர்பில் தெளிவான தீர்மானம் ஒன்றை எடுக்க உள்ளதாக தெரியவருகிறது.

இந்த 17 நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தில் இணைவது தொடர்பாக தீர்மானிக்க கலந்துரையாடல்களை நடத்தி வருவதாகவும் கூறப்படுகிறது.

இந்த அணியில் இருக்கும் மகிந்த அமரவீர, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் செயலாளராக கடமையாற்றி வருவதுடன் நிமல் சிறிபால டி சில்வா, அந்த முன்னணியின் உப தலைவராக கடமையாற்றி வருகிறார்.

ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணி தலைவரான ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, அரசாங்கத்தில் இணையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு அமைச்சு பதவிகளை வழங்க போவதில்லை என கூறி வருகிறார்.

இந்த நிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களை அரசாங்கத்தில் இணையுமாறு அழைப்பு விடுத்துள்ளதாக ஐக்கிய தேசியக்கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நடத்தும் இந்த பேச்சுவாரத்தையில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்கவும், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்கவும் கலந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது.

இதனிடையே ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் தேசிய அரசாங்கத்தில் விலகிய போது, ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியுடன் இணைவதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுவில் இணைந்து கொண்ட சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற வேண்டும் என மகிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை சேர்ந்த 17 பேர் அணியினர், ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் இணைய விரும்பவில்லை என்பதால், அவர்கள் அரசாங்கத்தில் இணைந்து தமது அரசியல் எதிர்காலத்தை உறுதிப்படுத்தி கொள்ள வேண்டும் என முன்னாள் அமைச்சர் பியசேன கமகே கூறியுள்ளார்.

Latest Offers