இப்போது இந்த இரகசிய தொடர்பு வேண்டாமே! மைத்திரி - மகிந்த தரப்புக்கு மனோ வழங்கிய பதில்

Report Print Murali Murali in அரசியல்

ஜனாதிபதி மைத்திரி, நிழலாட்சி பிரதமர் மகிந்த (மற்றும் பசில், கோட்டா ஆகியோரின் தூதர்கள்), என்னிடம் “பணப்பட்டுவாடா” பற்றி ஒருபோதும் பேசவில்லை என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

தனது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கத்தில் விடுத்துள்ள பதிவில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த பதிவில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

ஜனநாயக இளைஞர் இணைய தம்பிமார் வெளியிட்ட “65 கோடி ரூபா பேரப்பேச்சு ஒலிநாடாவை” செவிமடுத்த பல நண்பர்கள் என்னிடம், “மைத்திரியும், மகிந்தவும் உங்களிடம் என்ன பேரம் பேசினார்கள்” என்று ஆவலுடன் கேட்கிறார்கள்.

ஒக்டோபர் முதல் டிசம்பர் வரை பெருங்கோடிக்கணக்கான பணம் புரண்டது உண்மைதான். ஆனால், எம்முடன் பணப்பட்டுவாடா பற்றி பேசியது எம்மை கொண்டு போய் அங்கே சேர்த்து விட்டு அதில் “கமிஷன்” பெற துடித்தது “புரோக்கர்கள்” தான்.

ஜனாதிபதி மைத்திரி, நிழலாட்சி பிரதமர் மகிந்த (மற்றும் பசில், கோட்டா ஆகியோரின் தூதர்கள்), என்னிடம் “பணப்பட்டுவாடா” பற்றி ஒருபோதும் பேசவில்லை. என்னையும், எமது கட்சியையும், எமது கூட்டணியையும் வந்து தமது “அரசுடன்” இணைந்துக்கொள்ளுமாறுதான் அழைத்தார்கள்.

அதிலும் ஒருவர் மிகத்தெளிவாக ஒன்றை சொன்னார். “மனோ, உங்களை அழைப்பது நாடாளுமன்றத்தில் 113 எம்பீக்கள், என்ற பெரும்பான்மையை ஏற்படுத்திக்கொள்ள அல்ல.

அதை நாம் ஏற்படுத்துவோம். நீங்கள் வந்து எமது அரசை வர்ணமயப்படுத்த (“வர்ணவத்” என்ற சிங்கள வார்த்தையை பயன்படுத்தினார்!) வேண்டும்.

இதை ஒரு “தேசிய” அரசாங்கமாக ஆக்க வேண்டும். “சிங்கள-பெளத்த” அரசு ஒன்றை அமைக்க நாம் இப்போது விரும்பவில்லை. அது யுத்த காலம். இது யுத்தமில்லா காலம்.” என்று சொன்னார்.

அமைதியாக கேட்டு விட்டு நான் சொன்னேன்.

“அழைப்புக்கு நன்றி. இந்த அரசு உருவாக்கப்பட்ட, 'பின்கதவு முறைமை' எமக்கு ஏற்புடையதல்ல. ஆட்சி மாற்றம் தேர்தல் மூலமாகவே வரவேண்டும். உங்களுடன் எமக்கு தனிப்பட்ட விரோதம் கிடையாது.

உங்களை எதிரியாக கருதும் அளவுக்கு நான் ஒரு முதிர்ச்சியற்ற அரசியல்வாதியும் அல்ல! எதிர்கால தேர்தலில் வெற்றி பெற்று ஆட்சி அமையுங்கள்." தொடர்ந்தும் சொன்னேன்.

"அப்போதும் எமது ஆதரவு தேவைப்பட்டால் அழையுங்கள். அரசியலில் நீண்டகாலம் நான் இருக்க போவதில்லை. அப்போதும் நான் இருந்தால், ஒரு ஜனநாயக கட்சி தலைவன் என்ற முறையில் பரிசீலிக்கிறேன்.

இப்போது இந்த இரகசிய தொடர்பு வேண்டாமே.” என்று கூறி சந்தோஷமாக விடை பெற்றேன் என அமைச்சர் மனோ கணேசன் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers