ஜனாதிபதி கொலைச் சதித் திட்டம்! பொலிஸ் மா அதிபரின் குரலை பரிசோதிக்க உத்தரவு

Report Print Kamel Kamel in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோதபாய ராஜபக்ச ஆகியோரை படுகொலை செய்வதற்கு சதித் திட்டம் தீட்டிய குற்றச்சாட்டு குறித்து பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் குரல் மாதிரி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளது.

குரல் மாதிரி குறித்து பரிசோதனை நடாத்துவதற்கு கொழும்பு கோட்டே நீதவான் ரங்க திஸாநாயக்க, குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்கு அனுமதி வழங்கியுள்ளார்.

குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கடந்த 4ஆம் திகதி நீதிமன்றில் விடுத்த கோரிக்கைக்கு அமையவே இவ்வாறு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

இந்த கொலைச் சதித் திட்டம் தொடர்பிலான தொலைபேசி உரையாடல்கள் அடங்கிய 24 குரல் பதிவுகளை, ஊழல் ஒழிப்பு படையணியின் பணிப்பாளர் நாமல் குமார குற்றப் புலனாய்வுப் பிரிவினரிடம் ஒப்படைத்திருந்தார்.

இந்த குரல் பதிவுகளில் பொலிஸ் மா அதிபரும் நாமல் குமாரவும் உரையாடும் சில குரல் பதிவுகளும் உள்ளடக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதற்கு முன்னதாக இந்த கொலைச் சதித்திட்டம் தொடர்பில் நாமல் குமார மற்றும் பயங்கரவாத விசாரணைப் பிரிவிற்குப் பொறுப்பான முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவின் குரல் மாதிரிகள் சோதனையிடப்பட்டு அவை அவர்களுடையது என்பது உறுதி செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள முன்னாள் பிரதிப் பொலிஸ் மா அதிபர் நாலக டி சில்வாவிற்கு, நாமல் குமாரவை பொலிஸ் மா அதிபரே அறிமுகம் செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

எனினும் நாமல் குமார தனக்கு நெருக்கமானவர் கிடையாது என பொலிஸ் மா அதிபர் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.

Latest Offers