சிக்கி தவித்துக் கொண்டிருந்த நிலைப்பாடு தான் சென்ற அரசாங்கத்தில் காணப்பட்டது

Report Print Abdulsalam Yaseem in அரசியல்

நல்லாட்சி என்று சொல்லிக் கொண்டிருந்த நாங்கள் எத்தனையோ வேலைப்பாடுகளை முன்னெடுக்க முடியாமல் சிக்கி தவித்துக் கொண்டிருந்த நிலைப்பாடு தான் சென்ற அரசாங்கத்தில் காணப்பட்டது என இம்ரான் மஃரூப் தெரிவித்துள்ளார்.

குச்சவெளி பிரதேச செயலகத்துக்குட்பட்ட நிலாவெளி, இக்பால் நகர் முன்பள்ளி, விளையாட்டுக் கழகங்களுக்கு நேற்று மாலை பொருட்கள் வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

அங்கு தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்,

இரண்டு பெரும் கட்சிகளாக கருதப்படுகின்ற ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி என்ற இரண்டு கட்சிகளும் சேர்ந்து சரியான நிலைப்பாட்டை இந்த நாட்டிலே முன்னெடுக்க முடியாமல் போனது.

ஆனால் இன்று இந்த இடத்திலும் நான் நன்றி கூறுகின்ற இரண்டு பிரஜைகள் அல்லது கெளரவத்திற்கு உரியவர்கள் இருக்கின்றார்கள்.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு நன்றி சொல்கின்றேன். அதே போன்று இந்நாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவிற்கும் நன்றி சொல்கின்றேன்.

இன்று அவர்கள் எடுத்த முடிவின் மூலமாக தான் இன்று ஐக்கிய தேசிய கட்சிக்கென்று ஒரு தனி அரசாங்கம் உருவாகியிருக்கின்றது.

இந்த அரசாங்கத்தின் மூலம் எம்முடைய மக்கள் எந்த எதிர்பார்ப்புடன் ஒரு ஜனாதிபதியை தெரிவு செய்தார்களோ, எந்த எதிர்பார்ப்புடன் ஒரு பொதுத் தேர்தலுக்கு முகம் கொடுத்து நாடாளுமன்ற உறுப்பினர்களை தயார் செய்தார்களோ அவர்களுடைய தேவைகளை மிக விரைவில் பூர்த்தி செய்கின்ற ஒரு நிலைப்பாட்டிலே நானும் இருந்து கொண்டிருக்கின்றேன்.

நான் நினைகின்றேன் இந்த மாதத்திலிருந்து நாங்கள் எங்களுடைய அபிவிருத்திச் செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு முழுமையாக அர்ப்பணிப்புடன் செயற்படுவதற்காக இருக்கின்றோம்.

மேலும், அவ்வாறு செய்ய முடியாத சந்தர்பத்திலே அந்த அரசாங்கத்தை எச்சரிக்கின்ற இந்த அரசாங்கத்திலிருந்து கொண்டு சுயாதீனமாக இயங்குகின்ற செயற்பாடுகளையும் முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

நம்பிக்கை இருக்கின்றது பல நல்ல விடயங்கள் இந்த குச்சவெளி பிரதேச செயலகத்திற்கு மாத்திரமல்லாமல் திருகோணமலை மாவட்டத்திலும் பல அபிவிருத்தி செயற்திட்டங்களை முன்னெடுப்பதற்கு தயாராக இருக்கின்றோம்.

வேலை வாய்ப்பு தொடர்பாகவும் சொல்கின்றார்கள். எதிர்காலத்தில் அவர்களையும் இணைத்து கொண்டு அவர்களுக்கும் இந்த பிரதேசத்திலே அரச உத்தியோகத்தர்களாக உருவாகின்ற ஒரு நிலைப்பாட்டை ஏற்படுத்தித் தருவதும் என்னுடைய பொறுப்பாக காணப்படுகின்றது.

எங்களுக்கு கட்சி பேதங்கள் இல்லை, நிற பேதங்கள் இல்லை, மத பேதங்கள் இல்லை. ஒன்றுபட்டு சரியான முறையிலே செல்வதற்கான வாய்ப்பு ஏற்பட்டிருக்கின்றது.

உங்களுடைய முழு ஒத்துழைப்பையும், உங்களுடைய பங்களிப்பையும் எங்களுக்கு தருகின்ற சந்தர்பத்தில் நல்ல அபிவிருத்திகள், நல்ல செயற்றிட்டங்கள், நல்ல முன்மொழிவுகள் செய்வதற்கு தயாராக இருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

Latest Offers