இனக்கலவரம் நடைபெறாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைய வேண்டும்: வடிவேல் சுரேஸ்

Report Print Thiru in அரசியல்

கண்டி, திகன பகுதியில் இடம்பெற்ற இனக்கலவரம் போல் பசறையிலும் நடைபெறாமல் இருக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேணடும் என இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

பதுளையில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். இது தொடர்பில் மேலும் அவர் கருத்து தெரிவிக்கையில்,

நான் பசறை தேர்தல் தொகுதியின் ஐக்கிய தேசியக் கட்சியின் அமைப்பாளராக செயற்பட்டு வருகின்றேன். தற்போது எனக்கு எதிராக ஒரு சிலர் இனவாத போக்குடன் செயற்பட்டு வருகின்றனர்.

இதனை நான் ஆரம்பத்தில் பெரிதாக பொருட்படுத்தவில்லை. இருந்தும் எனக்கு எதிராக தொடர்ந்தும் செயற்பட்டு வருகின்றனர்.

இந்த நிலையில் ஐக்கிய தேசியக் கட்சியின் ஏனைய ஆதரவாளர்களும், தோட்ட பொதுமக்களும் இதற்கு எதிராக செயற்பட முன் வந்துள்ளனர்.

இவை செயற்படும் சந்தர்ப்பத்தில் பசறை பிரதேசத்தில் ஒரு சுமூகமற்ற நிலவரம் ஏற்படும். தற்போது இதனை தடுத்து நிறுத்தி மக்களுக்கும் ஊடகங்களுக்கும் தெளிவுப்படுத்தி அமைதி காப்பதற்காகவே இந்த ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்தி உள்ளேன்.

இந்த விடயம் தொடர்பில் உடனடியாக பேசி முடிவுக்கு கொண்டு வந்து அமைதியை பேணுமாறு ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகம் கோரிக்கை விடுத்துள்ளது.

தற்போது ஐக்கிய தேசியக் கட்சியினர் என சொல்லிக் கொண்டு இந்த முறையற்ற செயற்பாடுகளில் சிலர் ஈடுபட்டு வருகின்றனர். இவர்கள் பல சமூக விரோத செயற்பாடுகளில் ஈடுபட்டவர்கள்.

பதுளை மாவட்டத்தின் பிரபல அரசியல்வாதியிடம் பணம் பெற்று கொண்டு இந்த சமூக சீரழிவான செயற்பாடுகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

பசறை தேர்தல் தொகுதியில் இன, மத, மொழி, பாகுபாடு இன்றி சமாதனத்துடனும் ஐக்கியத்துடனும் மக்கள் வாழ்ந்து வருகின்றனர்.

ஐக்கிய தேசியக் கட்சியின் கொள்கையும் அதுவே. இந்த நிலையில் இதனை குழப்பும் வகையில் செயற்பாடுகள் நடைபெறுவது கண்டிக்கத்தக்கது.

இது சம்பந்தமாக ஆராய்ந்து முடிவு எடுக்குமாறு பசறை பொலிஸாருக்கும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகத்திற்கும் அறிவித்துள்ளேன். அவர்கள் உடனடியாக தீர்வு காண்பதாக கூறியுள்ளார்கள்.

மேற்படி செயற்பாடுகளை ஒத்த செயற்பாடுகள் பல இந்த பிரதேசத்தில் நடைபெற இருந்த சந்தர்ப்பத்திலும் அதனை நான் தடுத்து நிறுத்தி சமாதான நிலையை ஏற்படுத்தி உள்ளேன்.

எனவே மக்களும் ஆதரவாளர்களும் இந்த விடயம் தொடர்பில் பொறுமை காக்குமாறு கேட்டுக் கொள்கின்றேன். ஊவா மாகாண சபை உறுப்பினர்கள், பசறை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை தலைவர் உட்பட பசறை லுனுகல அனைத்து ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களும் எங்களுடனே இருக்கின்றனர்.

அவர்கள் அனைவரும் தற்போது இங்கு வந்துள்ளனர். இவர்களின் இந்த இன ரீதியான செயற்பாடுகள் குறித்து மக்கள் உட்பட ஊடகங்கள் மற்றும் சமூக வலை தள நண்பர்களும் பொறுப்புடன் செயற்பட வேண்டும்.

திகன மாவனெல்லையில் நடைபெற்ற இனக் கலவரம் போல் பசறையில் நடைபெற நான் ஒரு போதும் அனுமதிக்க மாட்டேன். மக்களும் அவதானமாக இருக்க வேண்டும்.

நான் இந்த தேர்தல் தொகுதியின் தமிழ் அமைப்பாளராக இருப்பதாலும் பல மில்லியன் ரூபா செலவில் அபிவிருத்திகள் முன்னெடுத்து வருவதாலும் இந்த பிரச்சினை உருவாகி உள்ளது என வடிவேல் சுரேஸ் தெரிவித்துள்ளார்.

இந்த ஊடகவியலாளர் சந்திப்பில் ஊவா மாகாண சபை உறுப்பினர் ஆ.கணேசமூர்த்தி, பசறை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை தலைவர் மற்றும் பசறை ஐக்கிய தேசியக் கட்சியின் பிரதேச சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டிருந்தனர்.

Latest Offers