மைத்திரி - ரணில் - மஹிந்த ஓரணியில் நிற்க வேண்டும்! சம்பந்தன் கோரிக்கை

Report Print Rakesh in அரசியல்

"நாட்டில் மீண்டும் ஓர் இரத்தக் களரி ஏற்படாமல் இருக்க வேண்டுமெனில் புதிய அரசியலமைப்பு உருவாக வேண்டும். இனவாதத்தைக் கக்காமல் - பிரிவினையை ஏற்படுத்தாமல் மைத்திரி, ரணில், மஹிந்த தரப்புகளைச் சேர்ந்தோர் ஓரணியில் நின்று புதிய அரசியலமைப்பு வெற்றிபெற உழைக்க வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் கோரிக்கை விடுத்துள்ளார்.

புதிய அரசியலமைப்பு நிறைவேறாது என்று மஹிந்த அணி, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் மக்கள் விடுதலை முன்னணி என்பன தெரிவித்து வரும் நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எப்படியான நடவடிக்கைகளை எடுக்கப் போகின்றது என்பது தொடர்பில் ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றிற்கு பதிலளிக்கும் போதே மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

"நாட்டைப் பிரிப்பதோ - துண்டாக்குவதோ எமது நோக்கமல்ல. நீதி மற்றும் சமத்துவம் என்பவற்றின் அடிப்படையில் பிரிக்க முடியாத - பிளவுபடாத ஒருமித்த நாட்டுக்குள் தேசிய பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வை நாம் அடைந்திட வேண்டும். இதுவே எமது நிலைப்பாடு இதில் நாம் உறுதியாக உள்ளோம்.

குறுகிய அரசியல் எண்ணம் கொண்ட இனவாதிகள், பிரிவினைவாதிகள் புதிய அரசியலமைப்பு விவகாரத்தை தங்கள் சுயநல அரசியலுக்குப் பயன்படுத்த முயல்கின்றனர். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரை அவர்கள் கண்டபடி வசைபாடுகின்றனர்.

இதைப் பார்த்து நாம் சோர்ந்துபோக மாட்டோம்,பின்வாங்க மாட்டோம். எமது பணி தொடரும்.

எந்தத் தடைகள் வந்தாலும் அதனைத் தகர்த்தெறிந்து முழு மூச்சுடன் நாம் பயணிப்போம். எமது இலக்கை அடைந்தே தீருவோம்.

புதிய அரசியலமைப்பைக் குழப்பும் முயற்சிகளை நாம் ஓரணியில் நின்று தோற்கடிக்க வேண்டும். இதற்கு மைத்திரி, ரணில், மஹிந்த ஆகிய தரப்பினர் ஒத்துழைப்புக்களை வழங்கவேண்டும்.

புதிய அரசியலமைப்பு விவகாரத்தில் நான் பெரிது, நீ பெரிது என்று இல்லாமல் நாடுதான் முக்கியம் என்ற வகையில் நாம் செயற்பட வேண்டும்.

கட்சிகளுக்கிடையிலான முரண்பாடுகளை புதிய அரசியலமைப்பு விவகாரத்துடன் எவரும் தொடர்பு படுத்தக்கூடாது. இது நாட்டின் நலன் சார்ந்த விடயம் என்பதை அனைவரும் நினைவிற்கொள்ள வேண்டும். எனவும் தெரிவித்துள்ளார்.

Latest Offers