பிரபாகரனின் நெருங்கிய நண்பரின் மரணம்! நாட்டுப் பற்றாளர் பட்டயத்தை படித்த வைகோ

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டில் கப்பல் ஓட்டிய வீர சிதம்பரம்பிள்ளை போலத் தமிழ் ஈழத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காகக் கப்பல் ஓட்டியவர் ஐயா பிறைசூடி என்று வைகோ தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வே. பிரபாகரனுடன் ஆரம்ப காலத்தில் இருந்து இயங்கி வந்த பிறைசூடி அண்மையில் காலமானார். அவரின் இறுதி கிரியைகளில் கலந்துகொண்டு பேசிய மருமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் வைகோ பேசியதாவது,

தமிழ் இனப் பற்றாளர் கேப்டன் பிறைசூடி அவர்கள் இயற்கை எய்தி இருக்கின்றார்கள். அவருக்குப் புகழ் அஞ்சலி செலுத்துவதற்காக நாம் இங்கே திரண்டு இருக்கின்றோம்.

ஐயா பிறைசூடி அவர்கள் கப்பல் கட்டும் தொழில் நுணுக்கத்தில் வல்லமை பெற்ற பட்டதாரியாக கொழும்பில் அரசுப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, சிங்கள மொழியைத்தான் பயன்படுத்த வேண்டும்; அப்போதுதான் பதவி உயர்வு என்ற போது, சிங்கள அரசுப் பணியே வேண்டாம் என்று தூக்கி எறிந்து விட்டு வெளியேறினார்.

அவர் பிரித்தானியக் கப்பல் படையில் பணி ஆற்றிய அனுபவம் பெற்றவர். கப்பல் கட்டும் தொழிலில் பயிற்சி பெற்றவர் என்பதை அறிந்த தேசியத் தலைவர்-என்னுடைய தலைவர்- தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் இயக்கத்திற்காக ஒரு வணிகக் கப்பல் சேவையைத் தொடங்குகின்ற பணியை அவரிடம் ஒப்படைத்தார்கள்.

ஐயா பிறைசூடி அவர்கள், அந்தப் பணிக்காக ஒரு இலட்சம் ரூபாயை அளித்தார்கள். கப்பல் நிறுவன அமைப்பு வேலைகளில் ஈடுபட்டார். 1985 ஆம் ஆண்டு ஒரு கப்பலை வாங்கி 'தோழன்' என்ற பெயரில் சிங்கப்பூரில் பதிவு செய்தார். விடுதலைப் புலிகளின் வணிகக் கப்பலாகத் திகழ்ந்தது.

விடுலைப் புலிகள் இயக்கத்திற்கான நிதியை வளர்ப்பதில் பெரும்பங்கு ஆற்றியது. தடைசெய்யப்பட்ட பொருட்களையோ, ஆயுதங்களையோ அந்த வணிகக் கப்பலில் ஏற்றுவது இல்லை.

ஆங்கில ஆதிக்கத்தை எதிர்த்துத் தமிழ்நாட்டில் கப்பல் ஓட்டிய வீர சிதம்பரம்பிள்ளை போலத் தமிழ் ஈழத்தில் விடுதலைப்புலிகள் இயக்கத்திற்காகக் கப்பல் ஓட்டியவர் ஐயா பிறைசூடி அவர்கள் ஆவார்கள்.

கடல் வணிகத்தில் கிரேக்கர்களுக்கும் முன்னோடிகள் தமிழ்நாட்டுக் கடலோடிகள். தமிழர்களிடம் பலமான மரக்கலங்கள் இருந்தன. அதனால்தான் தலைவர் பிரபாகரன் அவர்கள் ஈழத்தமிழர்களுக்கு கடற்படை வேண்டும் என்ற எண்ணத்தில் பின்னாளில் கடற்படை அமைத்தார்கள். சூசை அவர்கள் அதற்குத் தலைமைப் பொறுப்பு ஏற்றார்கள்.

ஐயா அவர்கள் மறைந்தார்கள் என்ற செய்தி கேள்விப்பட்டபோது நான் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்தேன். அவரது தலைமகன் கனடாவில் இருந்து வருகிறார். மற்ற இரண்டு புதல்வர்கள் இங்கே இருக்கின்றார்கள். கேப்டன் பிறைசூடி அவர்கள் பெசன்ட் நகர் மின் மயானத்தில் இன்று நல்லடக்கம் செய்யப்பட இருக்கின்றார்கள்.

உலகம் முழுவதும் இருக்கின்ற ஈழத்தமிழ்ப் பற்றாளர்களுக்கும், ஈழத்தமிழர்களுக்கும், தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் 'நாட்டுப் பற்றாளர்' என்ற கவுரவத்தை கேப்டன் பிறைசூடி அவர்களுக்கு வழங்கி இருக்கின்றார்கள்.

எந்த நோக்கத்தில் வணிகக் கப்பலை அமைத்துக்கொடுத்தாரோ அந்த நோக்கம் நிறைவேறும். தமிழனுக்கு என்று ஒரு தேசம், தமிழ் ஈழ தேசம் அந்த தமிழ் ஈழ தேசத்தில் முப்படைகளும் அமையும். அதைக் கட்டி எழுப்புவதற்குப் பல்லாயிரக்கணக்கான விடுதலைப் புலிகள் இரத்தம் சிந்தி இருக்கின்றார்கள். மரணத்தைத் தழுவி இருக்கின்றார்கள்; உயிர்களைத் தாரை வார்த்துக் கொடுத்து இருக்கின்றார்கள்.

இந்திய அரசின் துணையோடும், ஏழு அணு ஆயுத வல்லரசுகளின் ஆயுத பலத்தோடும் சிங்கள இனவாத அரசு, விடுதலைப் புலிகளைத் தோற்கடிக்க முடிந்தது. ஆனால் இந்தத் தோல்வி நிரந்தரம் அல்ல.

உலகத்தில் சின்னஞ்சிறு கீரைப் பாத்தி அளவுள்ள பகுதிகள் எல்லாம் பொது வாக்கெடுப்பில் தனித் தனி நாடுகளாக மலர்கின்றபோது, எல்லா நியாயங்களையும் கொண்ட ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக தனி அரசாக திகழ்ந்த தமிழ் ஈழ அரசு அமையும். அந்த அமைப்புக்கான அடித்தளத்தை அமைத்தவர்களில் ஒருவரான கேப்டன் பிறைசூடி அவர்கள் ஈழத்தமிழர்கள் வரலாற்றில், அமையப் போகின்ற சுதந்திரத் தமிழ் ஈழ வரலாற்றில், தியாகமும் மகத்தான வீரமும் கொண்ட விடுதலைப் புலிகள் வரலாற்றில் அழியாத இடத்தைப் பெற்று இருக்கின்றார்.

கேப்டன் பிறைசூடி அவர்கள் உடல் இன்றைக்குச் சிதையில் வைக்கப்பட்டாலும், உயிரால் மறைந்தாலும் என் போன்றவர்களின் நெஞ்சத்தில் என்றைக்கும் நிலைத்து இருப்பார். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கேப்டன் பிறைசூடி அவர்களுக்கு வீர வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

அவரது துணைவியார், பிள்ளைகள், மருமகள்கள், பேரக் குழந்தைகள், உற்றார் உறவினர்கள், ஈழத்தமிழர்கள் புலிகள் அனைவருக்கும் என் கண்ணீர் அஞ்சலியைத் தெரிவித்துக்கொள்கின்றேன்.

கனகசபை பிறைசூடி அவர்களுக்கு தமிழ் ஈழ விடுதலைப் புலிகள் தலைமையகமான அனைத்துலக தொடர்பகம் 'நாட்டுப் பற்றாளர்' மதிப்பு அளிப்பைத் தந்து இருக்கின்றது.

அந்தப் பட்டயத்தை நான் இங்கே வாசிக்கின்றேன்:

தமிழ் ஈழம் வடமராட்சி திக்கத்தைச் சேர்ந்த கனகசபை பிறைசூடி அவர்கள், தமிழ்நாடு சென்னையில் 2019 ஜனவரி 2ஆம் தேதி காலமானார் என்று செய்தி அறிந்து தமிழ் ஈழ மக்கள் கவலையில் ஆழ்ந்துள்ளனர். சிறிலங்கா அரசாங்கத்தில் பணியாற்றிய கேப்டன் பிறைசூடி அவர்கள், தனிச் சிங்களச் சட்டத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து தன் அரசுப் பணியைத் தாமாகவே துறந்தவர்.

பிரித்தானியா கப்பல் போக்குவரத்துச் சேவையில் கப்பல் அதிகாரியாக இருந்த காலத்தில் தமிழ் ஈழ விடுதலைப் போரின் முன்னோடிகளில் ஒருவராக தமிழ் ஈழ தேசியத் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரன் அவர்களுடன் இணைந்து, தொடக்க காலங்களில் இருந்தே விடுதலைப் போரில் பங்குகொண்டு பணியாற்றினார்.

1983 ஆம் ஆண்டு காலப் பகுதியில் முதன் முதலாக தமிழ் ஈழ விடுதலைப் புலிகளின் வளர்ச்சிக்காக வணிகக் கப்பல் நிறுவனத்தை உருவாக்கியதோடு மட்டுமல்லாது, எமது அமைப்பின் அனைத்துக் கப்பல் போக்குவரத்துகளும் இவர் மேற்பார்வையிலேயே நடந்தது.

தமிழ் ஈழ விடுதலைப் போராட்டத்தில் பங்கு கொண்டு, சிறைவாசம் கண்ட பிறைசூடி அவர்கள் தன் இறுதி மூச்சு வரை தமிழ் ஈழ விடுதலைக்காகவே வாழ்ந்தார். இவரின் பிரிவால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தினருடன் நாமும் இணைந்துகொள்வதுடன்இ,அமரர் கனகசபை பிறைசூடி அவர்களுக்கு 'நட்டுப் பற்றாளர்' என மதிப்பு அளிக்கப்படுகின்றது என்று அந்த அறிக்கையையும் படித்து முடித்தார்.

Latest Offers