மைத்திரியின் மனநிலை தொடர்பில் அறிக்கை கோரிய பெண்ணுக்கு ஏற்பட்டுள்ள நிலை!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் மனநிலை தொடர்பில் நீதிமன்றத்தில்வழக்குத் தாக்கல் செய்த பெண் அரசாங்கத்திற்கு ஒரு இலட்சம் ரூபாவினை வழக்குத் தொகையாக வழங்குமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த வருடம் டிசம்பர் மாதம் 10 ஆம் திகதி கொட்டாஞ்சேனை பிரதேசத்தைச் சேர்ந்த தக்ஷிலா லக்மாலி ஜயவர்தன என்பவர் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மனோநிலையை பரிசோதிக்க வேண்டும் என்று குறிப்பிட்டு மேன்முறையீட்டு நீதிமனறில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அவர் தாக்கல் செய்த மனுவில், ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேனவின் மனநிலை குறித்து மருத்துவ அறிக்கை ஒன்றைப் பெற்றுக்கொள்ள பொலிஸ் மா அதிபருக்கும், கோட்டை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிக்கும் உத்தரவிடுமாறு கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்நிலையில் குறித்த மனு, மேன்முறையீட்டு நீதிமன்ற தவிசாளரான நீதியரசர் ப்ரிதீ பத்மன் சூரசேன மற்றும் நீதியரசர் அர்ஜுன் ஒபேசேகர ஆகியோர் முன்னிலையில் இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது போதிய ஆதாரங்கள் மற்றும் சட்ட அடிப்படையற்ற வகையில் குறித்த மனு தாக்கல் செய்யப்பட்டிருப்பதால் மனுவைத் தாக்கல் செய்த மனுதாரர் ஒரு இலட்சம் ரூபாவை வழக்குக்கான செலவு தொகையாக அரசாங்கத்திற்குச் செலுத்துமாறு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதேவேளை, மனுதாரர் ஜனாதிபதிக்கு அவமானத்தை ஏற்படுத்துவதற்கும், நாட்டுக்கும் அபகீர்த்தியை உருவாக்கும் நோக்கிலும் குறித்த மனுவைத் தாக்கல் செய்திருப்பதாக மேன்முறையீட்டு நீதிமன்றம் தனது தீர்ப்பில் தெரிவித்துள்ளது.

மனநோய் தொடர்பான சட்டத்தின் கீழ் வழக்கு தாக்கல் செய்யப்பட வேண்டுமானால் பொலிஸ் நிலையத்தில் மனநோய் தொடர்பில் முறையிட வேண்டும். ஆனால் மனுதாரரின் மனுவில் இதற்கான அறிக்கைகள் எதுவும் சமர்ப்பிக்கப்படவில்லை என்றும் மேன்முறையீட்டு நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Latest Offers