தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்தது என்பதை நாடு முழுவதும் அறியும்

Report Print Navoj in அரசியல்

சட்ட ஆட்சிக்கு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு எவ்வாறு பங்களிப்புச் செய்தது என்பதை நாடு முழுவதும் அறியும் என இலங்கைத் தமிழரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் கிருஸ்ணபிள்ளை துரைராசசிங்கம் தெரிவித்துள்ளார்.

உறுகாமம் நீர்ப்பாசன திட்டத்திலுள்ள வாகனேரி நீர்ப்பாசனத் திட்டத்தினை தனியாக பிரிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

எழுதப்பட்ட சட்டம், சம்பிரதாயம், சுற்றுநிரூபங்கள், இயற்கை நீதிக் கோட்பாடு என்று இருக்கின்றது. இந்த விடயத்தில் இயற்கை நீதி கோட்பாடு பின்பற்றப்பட வேண்டும். மக்களுடைய பிரச்சினைகள் அந்தந்த குறிப்பிட்ட அமைச்சரிடம், அதிகாரிகளிடம் கொண்டு சென்று கதைக்கப்பட வேண்டும்.

இதில் எம் அனைவருக்கும் பொறுப்பு உண்டு என்ற அடிப்படையில் எமது விவசாயிகள் எம்மை வந்து சந்தித்ததன் பின் நேற்றைய தினம் குறித்த அமைச்சரைத் தொடர்பு கொள்ள முயற்சித்தேன் அவர் இந்தியாவில் இருந்தமையால் தொடர்பு கொள்ள முடியவில்லை.

இன்று அவர் என்னுடன் தொடர்பை ஏற்படுத்தியிருந்தார். அப்போது இவ்விடயம் தொடர்பில் நான் அவருக்கு விவரித்தேன். அவரும் இது தொடர்பான சில விடயங்களை என்னுடன் கலந்துரையாடினார்.

நீர்ப்பாசன அலகுகளை அதிகரிப்பதன் மூலம் அந்த அந்த அலகுக்கான நிதி ஒதுக்கீடுகளைப் பெற்று அந்தப் பிரதேசங்களை முன்னேற்ற முடியும் என்றும், அந்த வகையிலே நம்முடைய பிரதேசத்திலும் அவ்வாறான பிரிவுகளை மேற்கொள்வதற்கான அனுமதியைப் பெறுவதற்கு அமைச்சின் செயலாளரைத் தொடர்பு கொண்ட போது தற்போதைக்கு ஒரு அலகினை புதிதாக அமைப்பதற்கு அனுமதி கிடைத்ததாகவும் அந்த வகையிலே தான் இந்தத் தீர்மானத்தை எடுத்தாகவும் தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் விவசாயிகளுடன் கலந்துரையாடப்பட வேண்டும். இயற்கை நீதிக் கோட்பாட்டை அனுசரித்து இதில் செயற்படுவீர்கள் என நம்புகின்றேன் என்று தெரிவித்தேன்.

அதற்குத்தான் அதை வரவேற்பதாகவும், விவசாயிகளுடன் கலந்துரையாடுவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்வோம் என்றும் தெரிவித்தார்.

இந்த விடயத்தில் வாகனேரி, புணானை, கட்டுமுறிவு, வடமுனை ஆகிய பிரதேசங்களுக்கான அலகு ஒன்றை உருவாக்குவதற்கான யோசனை ஒன்றை அவர் கொண்டிருக்கின்றார் என்பது விளங்குகின்றது.

இது தொடர்பில் விவசாயிகளை சந்திக்க வேண்டும். அநேகமாக அடுத்த வாரமளவில் இந்த அலகுக்கான விவசாயிகளை அழைத்து அவர்களின் ஆலோசனைகள் மற்றும் விருப்பின் அடிப்படையில் தான் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட வேண்டும் என்றும் தெரிவித்திருக்கின்றோம்.

இதனை கொள்கை ரீதியில் அமைச்சர் அவர்கள் ஏற்றுக் கொண்டுள்ளார். அதனைக் காரிய சாத்தியமாக்கும் வகையிலே எமது கருத்துக்கள் அமைய வேண்டும். எமது நாடாளுமன்ற உறுப்பினர்கள் அதற்கு அனுசரணையாக இருப்பார்கள்.

இந்த விடயத்தில் தனிப்பட்ட என்னுடைய விருப்பம் அல்லது நாடாளுமன்ற உறுப்பினர்களின் விருப்பம் என்று ஒன்றும் இருக்காது.

விவசாயிகளுடன் கலந்துரையாடி அவர்களின் ஆலோசனைகளின் அடிப்படையில் தான் நாங்கள் செயற்படுவோம். தனிப்பட்ட நாங்கள் யாரும் இதிலே முடிவெடுக்க மாட்டோம் என்றும் அனைத்தும் விவசாயிகளின் கருத்தின் அடிப்படையில் தான் இவ்விடயம் நடைபெறும் என்று குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers