தள்ளிப்போன அரசமைப்புப் பேரவையின் கூட்டம் எதிர்வரும் வெள்ளிக்கிழமை

Report Print Rakesh in அரசியல்

கடந்த நவம்பர் மாதம் 7ஆம் திகதி கூடவிருந்த நிலையில் அரசியல் குழப்பத்தால் தள்ளிப்போன அரசமைப்பு பேரவையின் கூட்டம் பெரும்பாலும் எதிர்வரும் வெள்ளிக்கிழமையன்று நடைபெறும் என தகவல் கிடைத்துள்ளது.

புதிய அரசமைப்புக்கான நகல் குறித்து இந்தக் கூட்டத்தில் தீர்மானிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

நாடாளுமன்றத்தை அரசமைப்புப் பேரவையாகக் கூட்டுவதற்கான ஒழுங்குகளைக் கவனிப்பதற்காக புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்கான வழிகாட்டல் குழு நாளை பிற்பகல் 3 மணிக்கு கூடுகின்றது.

தொடர்ந்தும் நாடாளுமன்ற கட்டடத் தொகுதியில் அதன் தலைவரான பிரதமர் ரணில் விக்ரமசிங்கவின் தலைமையில் வழிகாட்டல் குழு கூட்டம் கூடுகின்றது.

புதிய அரசமைப்பு உருவாக்கத்துக்காக அமைக்கப்பட்ட வழி நடத்தல் குழு உத்தேச நகல் யாப்புக்கான ஒரு வடிவத்தை தயாரித்துள்ள நிலையில் அது பற்றி ஆராய்வதற்காக நாடாளுமன்றம் கடந்த நவம்பர் மாதம் 07ஆம் திகதி அரசமைப்புப் பேரவையாகக் கூடவிருந்தது.

ஆனால், அதற்கிடையில் ஒக்டோபர் 26ஆம் திகதி முன்னெடுக்கப்பட்ட அரசியல் சூழ்ச்சியினால், அரசு மாற, அரசமைப்புப் பேரவைக் கூட்டமும் நவம்பர் மாதம் 7ஆம் திகதி நடைபெறவில்லை என்பது குறிப்பிடதக்கது.

இந்நிலையில் டிசம்பர் 16ஆம் திகதி ரணில் விக்ரமசிங்க மீண்டும் பிரதமரானார். புதிய அரசமைப்புக்கான நகல் வடிவம் எதிர்வரும் பெப்ரவரி 4ஆம் திகதிக்கு - சுந்திர தினத்துக்கு முன்னர் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட பின்னணியில் மீண்டும் அரசமைப்பு வழிகாட்டல் குழுவை நாளை பிற்பகல் 3 மணிக்கு அதன் தலைவரும் பிரதமருமான ரணில் விக்ரமசிங்க கூட்டவுள்ளார்.

எதிர்வரும் வெள்ளிக்கிழமை நாடாளுமன்றத்தை அரசமைப்புப் பேரவையாக கூட்டவும் - தற்போது வழிகாட்டல் குழுவில் உத்தேச நகல் யாப்புக்கான வடிவத்தில் உள்ள ஆவணத்தை அரசமைப்புப் பேரவையில் சமர்ப்பிக்கவும் - அதை அரசமைப்புப் பேரவை ஆராய்ந்து, அதனை உத்தேச புதிய அரசமைப்பை உருவாக்குவதற்கான நகல் வடிவமாக ஏற்க செய்யவும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டிருக்கின்றன.

Latest Offers